‘அஜித் பவார் அடுத்த முதல்வர் ஆவார்’ அடித்து சொல்கிறார் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர்

ஏக்நாத் ஷிண்டே - அஜித் பவார்
ஏக்நாத் ஷிண்டே - அஜித் பவார்

‘மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு பதிலாக, அஜித் பவார் முதல்வராக பொறுப்பேற்பார்’ என்று மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவான் தெரிவித்திருக்கிறார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தை மீண்டும் அரசியல் சூறாவளி மையம் கொண்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை செங்குத்து வாக்கில் பிளந்துகொண்டு பிரிந்து சென்ற அஜித் பவார், மாநிலத்தை ஆளும் பாஜக - சிவசேனா(ஷிண்டே) கூட்டணியில் இணைந்தார். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 7 பேருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது.

இதனிடையே தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு பதிலாக கூடிய விரைவில் அஜித் பவார் முதல்வராக அமர்வார் என அரசியல் ஆருடங்கள் அங்கே அதிகரித்திருக்கின்றன. பதவிக்கு ஆபத்து என்றதும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசி வந்தார். ஆனபோதும், பாஜக தலைமை அஜித் பவாரை முதல்வராக்குவதில் தீவிரமாக இருக்கிறது என்று அடித்து சொல்லியிருக்கிறார், மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரித்விராஜ் சவான்.

இது குறித்து மேலும் அவர் மேலும் கூறுகையில், “முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவை வைத்துக்கொண்டு 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக டெல்லி தலைமை விரும்பவில்லை. தானே பகுதியைத் தாண்டி ஷிண்டேக்கு செல்வாக்கு இல்லாததும் ஒரு காரணம். மேலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், முதல்வர் ஷிண்டே உள்ளிட்டோரின் எம்எல்ஏ பதவிகளை விரைவில் சபாநாயகர் நீக்கம் செய்துவிடுவார்.

அதனை கணித்தே, தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து, அஜித் பவார் தலையிலானோரை கூட்டணிக்குள் சேர்த்திருக்கிறார்கள். மோடியின் யூஸ் அன்ட் த்ரோ அரசியலுக்கு பாவம், ஏக்நாத் ஷிண்டேவும் பலியாகியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார் பிரித்விராஜ் சவான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in