`புதிய பாடத்திட்டம் தொடங்கும்போது மாநில அரசை ஏஐசிடிஇ கலந்தாலோசிக்க வேண்டும்’- அமைச்சர் பொன்முடி!

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி’புதிய பாடத்திட்டம் தொடங்கும்போது மாநில அரசை AICTE கலந்தாலோசிக்க வேண்டும்’ - அமைச்சர் பொன்முடி!

மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் தொடங்கும்போது மாநில அரசை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) கலந்தாலோசிக்க வேண்டுமென உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று வினா விடை நேரத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ’’ சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப பாடப்பிரிவு தொடங்கிப் புதிய தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுக் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாகும் தகவல் வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அதே படிப்புக்கு 13,000 வசூலிக்கும் நிலையில் இதற்கு மட்டும் ஒன்றரை லட்சம் வசூலிக்கப்படுகிறது.

இந்தப் பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்வதால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு கிடைக்காது என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘’ பி.டெக், எம்.டெக் போன்ற படிப்புகளைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கக்கூடிய உரிமை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மட்டும் தான் இருக்கிறது.

நெல்லை பல்கலைக்கழகத்தில் இருந்த எம்.டெக் படிப்பு நிறுத்தப்பட்டது. சேலம் பல்கலைக்கழகத்திலும் எம்டெக் நடைபெற்றது, தற்போது நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு பி.டெக் படிப்பைத் தொடங்குவதற்கு ஒரு தனியார் கல்லூரியில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசின் கவனத்திற்கு வரவில்லை.

காலையிலேயே இதுகுறித்துத் துணைவேந்தரிடம் பேசியுள்ளேன். அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அனுமதிக் கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார்கள். இது போன்ற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் மாநில அரசைக் கலந்து ஆலோசிக்காமல் அனுமதிக் கொடுக்கக் கூடாது என ஏஐசிடிஇயை கேட்டுக்கொள்கிறேன். சேலம் பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற படிப்பு நடைபெறாது. அதற்கான அனுமதிக் கொடுத்திருந்தால் அதை நிறுத்த சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in