குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக- வெற்றி பெற காரணமான திமுக உறுப்பினர்

குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக- வெற்றி பெற காரணமான திமுக உறுப்பினர்
குற்றாலம் அருவி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சி தனிச்சிறப்புக் கொண்டது. தென்காசி மாவட்டத்தின் அடையாளமே குற்றாலம் அருவி தான் என்பதால், அருவியை உள்ளடக்கிய இந்தப் பேரூராட்சியைக் கைப்பற்ற திமுக- அதிமுக இடையே கடும்போட்டி நிலவியது. ஏற்கெனவே மூன்றுமுறை இங்கு தலைவர் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு பிரச்சினைக் காரணமாக ரத்தும் ஆகியிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக, 250க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் எட்டு வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக இரண்டுமே தலா நான்கு வார்டுகளில் வென்றன. முன்னதாக கடந்த மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது அதிமுக கவுன்சிலர்கள் மட்டுமே வந்தனர். திமுக கவுன்சிலர்கள் வரவில்லை. இதனால் முதல்முறையாக மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 24-ம் தேதிக்கு மீண்டும் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அப்போதும், திமுக கவுன்சிலர்கள் வாக்களிக்க வரவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அளவுக்கு பெரும்பான்மை கவுன்சிலர்கள் வராததால் மீண்டும் குற்றாலம் பேரூராட்சித் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலையில் குற்றாலம் பேரூராட்சித் தலைவர் தேர்தல் மீண்டும் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் குற்றாலம் பேரூராட்சி செயலாளர் கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன் 3 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். திமுக உறுப்பினர் ஒருவர் வாக்களித்ததால் அதிமுக இந்த பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in