தனித்துவிடப்படும் அதிமுக... கூட்டணிக்கு ஆர்வம் காட்டாத கட்சிகள்; என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுக நடத்திய பேச்சுவார்த்தைகளில் இதுவரை எந்த முக்கிய கட்சியும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுக தனித்துவிடப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

ஜெயலலிதா காலத்தில் அதிமுகவோடு கூட்டணி வைக்க கட்சிகளிடையே போட்டாபோட்டியே நடக்கும். கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகள் போயஸ் கார்டனில் கால்கடுக்க காத்திருக்கும் நிலைமைதான் ஏற்படும். அதன்பின்னர்கூட இபிஎஸ் ஆட்சியில் தொடரும் வரை பலமான கூட்டணியை அமைத்தே களம் கண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டது அதிமுக. இதனால் தற்போது எந்த பெரிய கட்சியும் கூட்டணியில் இல்லாமல் தவித்து வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கோப்பு படம்

திமுக ஒரு பக்கம் தனது வலிமையான கூட்டணியை உறுதி செய்துள்ளது. மேலும், கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து முதல் சுற்று பேச்சுவார்த்தையையும் நிறைவு செய்துள்ளது திமுக.

அதே நேரத்தில் அதிமுக சார்பாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குழு சில வாரங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இப்போது கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிமுகவுடன் தேமுதிக, பாமக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டாலும், ஒரு கட்சியின் பிரதிநிதி கூட அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை இதுவரை தொடங்கவில்லை.

அதே நேரத்தில் பாஜகவுடன் இந்த கட்சிகள் கூட்டணி சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக யாரும் இதுவரை அதிமுக கூட்டணியில் இணையவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன், மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜி.கே.வாசன் டெல்லி சென்று ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை சந்தித்த நிலையில், அவர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசினார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்தவித உறுதி மொழியும் தரப்படவில்லை. மேலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது. எனவே அதிமுக வலுவான கூட்டணியுடன் போட்டியிடுமா அல்லது தனித்துப் போட்டியிடும் சூழல் உருவாகுமா என்று இனிவரும் நாட்களில் தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in