தனித்து விடப்படுகிறாரா ஈபிஎஸ்?

அழுத்தம் கொடுக்கும் பாஜக... ஆடிக்கிடக்கும் அதிமுக!
தனித்து விடப்படுகிறாரா ஈபிஎஸ்?

பாஜக - திமுக கூட்டணி என்று ஈபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகமும், ஜெயக்குமாரும் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது தமிழக அரசியலின் களநிலவரத்தையும், ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின்  இக்கட்டான சூழ்நிலையையும் அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான், “அதிமுக தலைமையில்  மெகா கூட்டணி அமைப்போம்” என்று ஈபிஎஸ் ஆர்ப்பாட்டமாய்ச் சொன்னார்.  பாஜக தலைவர் அண்ணாமலையும், “அதிமுக தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமையும்” என்று அதை உடனடியாக உறுதிப்படுத்தினார்.  இரண்டு தரப்பும் மிக அழுத்தமாக கூட்டணி குறித்து இப்படியான கருத்துகளைச் சொல்லியிருந்த நிலையில், இப்போது சட்டென காட்சிகள் மாறுகின்றன. திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயல்கிறது என்கிற அதிமுகவினரின் பேச்சை தமிழக அரசியல் வட்டாரம் ஆச்சரியத்துடன் பார்க்கிறது. 

இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஈபிஸ் தலைமையிலான அதிமுகவுக்கு பாஜகவின் அழுத்தம் தாங்க முடியாத அளவுக்குப் போய்விட்டது. அதனால் அதிமுகவினர்  தற்போது உச்சபட்ச கொதிப்பில் இருக்கிறார்கள். அதன்விளைவே பாஜகவை வம்பிழுக்கும் வார்த்தைகளை அவர்கள் விடத் தொடங்கி யிருக்கிறார்கள் என்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளை அடக்கி,  தனது கட்டுக்குள் வைத்திருப்பது பாஜகவின் வழக்கம். வாய்ப்புக் கிடைத்தால் கூட்டணிக் கட்சிகளை கரைத்து தனக்குள் ஐக்கியமாக்கி விடுவதையும் பாஜக வழக்கமாக வைத்திருக்கிறது. 

அப்படி பல மாநிலக் கட்சிகள் காணாமலும், பாஜகவில் கரைந்தும் போய்விட்ட நிலையில், சில கட்சிகள் மட்டுமே பாஜகவின் பலப்பிரயோகத்தை மீறி வெளியே வந்திருக்கின்றன. நிதிஷ்குமார்,  சந்திரசேகர்ராவ், உத்தவ் தாக்கரே  உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் அப்படித்தான் வெளியே வந்தார்கள்.  அந்த வரிசையில் அதிமுகவின் ஈபிஎஸ்ஸும்  தற்போது பாஜகவின் அழுத்தம் தாங்க முடியாமல் பீரிட்டு வெளிக்கிளம்பிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதன்வெளிப்பாடாகவே, சென்னை வந்த அமித்ஷாவை சந்திக்காதது, குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு செல்லாதது என வேறுமுகம் காட்டி வருகிறார் ஈபிஎஸ்.

PICHUMANI K

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் - இந்த மூவரையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்ற வேண்டும் என்பதுதான் ஈபிஎஸ்ஸுக்கு பாஜக கொடுக்கும் அழுத்தம். ஆனால், இந்த யோசனைக்கு ஊசியளவு கூட இடம் கொடுக்கவில்லை ஈபிஎஸ். அதனால் அவரை கழட்டிவிட்டு கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள திட்டமிடுகிறது பாஜக என்பதையும் நாம் முன்பே எழுதியிருந்தோம். அண்மையில் டெல்லி சென்றிருந்த அண்ணாமலை அதிமுக கூட்டணி குறித்து வேறொரு கருத்தையும் தலைமையிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார். 

“தற்போதைய நிலையில் ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஒற்றை இலக்கத்தில் தான் சீட்களை ஒதுக்குவார்கள். ஆனாலும் அந்தக் கூட்டணியில் இருந்தால் நாம் வெற்றிபெறுவது கடினம். அதனால் நம்முடைய தலைமையில் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. இதையடுத்தே ஈபிஎஸ் அதிமுக அலப்பறையைக் கூட்டுகிறது என்கிறார்கள். 

தனது புதிய திட்டப்படி  அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தன் பக்கமே நிறுத்தி வைத்துக்கொண்டுள்ளது பாஜக. இந்த வாரத்தில்  ஈபிஎஸ் நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் பாஜகவும் கலந்துகொள்ளவில்லை. பாமக உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை. இதிலிருந்தே பாஜக கூட்டணிக் கட்சிகளின் தற்போதைய நிலைப்பாட்டையும்  பாஜக தயவு இனி தங்களுக்குக் கிடைக்காது என்பதையும் ஈபிஎஸ் உணர்ந்து கொண்டிருப்பார்.

ஈபிஎஸ் தவிர ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூவரும் பாஜகவுக்கு பக்கபலமாக இருக்க எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். இவர்களை அதிமுக அணிக்குள் கொண்டுவர சம்மதிக்கவில்லை என்றால் நீங்கள் தனிமைப்பட்டு நிற்கவேண்டி இருக்கும் என்பதை டெல்லி பயணத்தின் போது ஈபிஎஸ்ஸுக்கு நாசூக்காக எடுத்துச் சொல்லிவிட்டார்களாம் பாஜக தலைவர்கள். ஆனாலும் கலங்காத ஈபிஎஸ், “எது நடந்தாலும் சரி, இரட்டை இலையை முடக்கினாலும் கவலையில்லை. இதற்கெல்லாம் பயந்து அந்த மூவரையும் உள்ளே சேர்க்கமாட்டோம்” என்று பாஜக தலைகளுக்கு பாந்தமாக உணர்த்திவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள். 

இதையடுத்தே  சி.வி.சண்முகமும் ஜெயக்குமாரும் “திமுகவுடன் பாஜக கூட்டு வைக்கப்போகிறது” என்று பொதுவெளியில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பாஜக தங்களுடன் கூட்டணி இல்லை என்பதை பொதுவெளியில் இப்படி வெளிப்படையாகச்  சொன்னால், அதற்கு பாஜக பதில் சொல்லியே தீரவேண்டும். அப்படிச் சொல்லும்போது அதிமுகவோடுதான் எங்கள் கூட்டணி என்று பாஜகவை வாய்விட்டு சொல்லவைப்பதுதான் ஈபிஎஸ் தரப்பின் நோக்கம்.

இன்னொரு பக்கம், சி.வி.சண்முகம் சொன்னதுபோல காங்கிரசை கழட்டிவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைக்குமா திமுக? கூட்டணிக்கு பாஜக தயாராக இருந்தாலும் திமுக தயங்காமல் இதற்குச் சம்மதிக்குமா? என்ற கேள்களும் எழுகின்றன. ஏனென்றால், தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கும் திமுக, அதற்கான முன்னெடுப்புகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அப்படியிருக்க, பாஜகவுடன் கூட்டணி வைத்தால்  திமுக மீதான நம்பகத்தன்மை தேசிய அளவிலும், மாநிலத்திலும் குறைந்து போய்விடலாம் என்பதால் திமுக இந்த விஷயத்தில் அப்படி எல்லாம் அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாது.

ஆனாலும் அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் திமுகவை கூட்டணிக்கு நிர்பந்திக்கும் காரியத்தையும் பாஜக பார்க்கும். அதற்குத் தோதாக அண்ணாமலையும் தினமும் ஊழல், ஊழல் என்று தொடர்ந்து திமுகவை மிரட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. கூட்டணிக்கு அவ்வளவு எளிதில் திமுக சம்மதிக்காது என்பதால் திமுகவுக்கு மேலும் பல வழிகளிலும் பாஜக நிர்பந்தம் கொடுக்கலாம் என்கிறார்கள்.   

ஒருவேளை, பாஜகவின் திட்டம் பலித்து காங்கிரஸை திமுக கழட்டிவிட்டால் தமிழக அரசியல் களத்தில் அதிரடியாக காட்சிகள் மாறும். ஏற்கெனவே ராகுல் காந்தியுடன்  ஈபிஎஸ் பேசியிருப்பதாகச் சொல்லப்படும் செய்தியை உண்மையாக்கும் விதமாக, ஈபிஎஸ் அணியை காங்கிரஸ் நெருங்கும்.  அதோடு மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் அந்த அணியில் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கலாம். 

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் பட்சத்தில் பாஜக அதை அத்தனை எளிதில் சோபிக்க விட்டுவிடாது. ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்காதபடிக்கு டெல்லியில் காய்நகர்த்தப்படும். இதன் மூலம் அதிமுக என்ற கட்சியில் ஈபிஎஸ் தனிமரமாக்கப்படுவார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓபிஎஸ், சசிகலா, தினகரனை வைத்து இன்னொரு அணியை பாஜகவே உருவாக்கும். மூன்றாவது அணியாக களத்தில் நிற்கும் இந்த அணியானது அதிமுக வாக்கு வங்கியை பதம் பார்க்கும். பாஜக எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

இதையெல்லாம் மனதில்வைத்துத்தானோ என்னவோ, “விரைவில் வனவாசம் போகப்போகிறார் ஈபிஎஸ்” என்று வைத்திலிங்கமும், “இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும்” என்று ஓபிஎஸ்ஸும்  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சூர்யா வெற்றிகொண்டான்
சூர்யா வெற்றிகொண்டான்

இந்த அரசியல் கணக்குகள் குறித்தெல்லாம் திமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான வழக்கறிஞர்  சூர்யா வெற்றிகொண்டானிடம் பேசினோம். ‘’நடப்பது ஆரிய - திராவிட போர். இதில்  சமரசம்  என்ற பேச்சுக்கே வேலையில்லை. மத்தியில் இருப்பது ஆரிய ஆட்சி; இங்கே இருப்பது திராவிட மாடல் ஆட்சி.  அது மதவாதிகளுக்குச் சொந்தமானது;  இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எனவே, அந்த சனாதன சக்திகளோடு  எந்த சமரசத்தையும் எங்கள் முதல்வர் செய்யமாட்டார்.  எனவே,  எந்தக் காலத்திலும் பாஜகவுடன் திமுக கூட்டணி அமையவே அமையாது. 

2019 மக்களவைத் தேர்தலிலேயே ராகுலை  பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் எங்கள் தலைவர்.  2024-லும் அதுதான் திமுகவின் நிலைப்பாடு. அதனால்  திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. குஜராத் முதல்வர் பதவியேற்பு உள்ளிட்ட பல விஷயங்களில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக பாஜக நடந்துகொண்டது என்பதால் ஈபிஎஸ் கோபமடைந்துள்ளார்.  அதனால் பாஜகவை  எச்சரிக்கும் விதமாக சி.வி.சண்முகத்தை இப்படிப் பேச வைத்திருக்கிறார்; அவ்வளவுதான். ஆனால், எப்படி விலகிப் போனாலும் ஈபிஎஸ் தரப்பினர் பாஜகவை எளிதில் விட்டு விடமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி” என்றார் அவர்.

“பாஜகவில் இணைகிறார் ஓபிஎஸ்” என்ற செய்தியை பாஜக தரப்பிலிருந்தே பரப்புகிறார்கள். “திமுகவுடன் கூட்டணிவைக்கப் போகிறது பாஜக” என்று ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பொதுவெளியிலேயே பேசுகிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்களே... இவையெல்லாம் அதற்கான அறிகுறிகளா அல்லது வழிக்குக் கொண்டுவர வைப்பதற்கான மிரட்டல் நாடகங்களா என்பது போகப் போகத்தான் தெரியும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in