அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்ற சசிகலாவின் ஆசை நிறைவேறுமா?

அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்ற
சசிகலாவின் ஆசை நிறைவேறுமா?
சசிகலா

அதிமுகவில் என்ன தான் நடக்கிறது என்பது தெரியாமல் அக்கட்சியின் அடிமட்டத்தொண்டர்கள் பித்துப் பிடித்தது போல் இருக்கிறார்கள். யார் பக்கம் சாய்வது எனத் தெரியாமல் மதில் மேல் பூனை போல அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறதோ என்ற எண்ணம் அதிமுகவினருக்கு ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம், 'அதிமுக வலுப்பெற வேண்டும். அதற்கு சசிகலா, டி.டி.வி.தினகரனை சேர்க்க வேண்டும்' என்று முழக்கம் கூடுதலாக கேட்பது தான்.

அதிமுக என்ற வலிமையான இயக்கத்தைப் பாதுகாக்கும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என அதிமுகவினரால் ஓபிஎஸ், ஈபிஎஸ் புகழப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே ஏற்பட்டுள்ள இடைவெளியின் நீளம் தற்போது அதிகரித்தது தான், அதிமுக வலுப்பெற வேண்டும் என்ற தற்போதைய முழக்கத்திற்கு காரணமா?

குறிப்பாக, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், அத்துடன் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வலுவான கூட்டணியோடு போட்டியிட்ட அதிமுக, 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேனியை மட்டுமே போராடிக் கைப்பற்ற முடிந்தது. அதே போல 22 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவிற்கு கிடைத்தது 9 இடங்கள் தான். இதன் பின் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில், திமுக கூட்டணி 138 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக இரண்டு இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. இதே போல மொத்தமுள்ள 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் இடங்களில் திமுக கூட்டணி 1009 இடங்களிலும், அதிமுக கூட்டணி 215 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. இதன் பிறகு நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எல்லாவற்றிலும் அதிமுகவிற்கு தோல்வி முகம் தான். கட்சி என்றால் வெற்றி, தோல்வி இருக்கும். ஆனால், அதுகுறித்த பரிசீலனை கூடவா இருக்காது?

ஆனால், அதிமுக தலைமை அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. இதற்கு காரணம் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் இருக்கும் ஈகோ. இது அவ்வப்போது வெடிக்கும்.

சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற போது, அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற மோதல் ஏற்பட்டது. இந்த தேர்தலில் 66 பேர் அதிமுக எம்எல்ஏவாயினர். அடுத்து இதில் யார் அதிமுக சட்டமன்றக்குழுவிற்கு தலைவராவது என மீண்டும் மோதல். இதையொட்டி நடைபெற்ற கூட்டத்தில், 'ஈபிஎஸ்சின் தவறான தேர்தல் வியூகங்கள் தான், அதிமுக தோல்வியடைய காரணம்' என ஓபிஎஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டியதாக தகவல் வெளியானது.

அதிமுக தலைமை அலுவலகம். (பைல் படம்)
அதிமுக தலைமை அலுவலகம். (பைல் படம்)

அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு அளவிற்கு நிலைமை மோசமானது. இதன் காரணமாக அதிமுக சட்டமன்றக்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமலே அன்றைய கூட்டம் முடிந்தது. இந்த கூட்டத்திற்குப் பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்றார். மீண்டும் ஒரு 'தர்மயுத்தத்திற்கு' ஓபிஎஸ் தயாராகிறாரா என்ற பரபரப்பு அப்போது ஏற்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இதன் பின் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், 'எடப்பாடி பழனிசாமி தான், சட்டமன்ற குழுத்தலைவராக வேண்டும்' என்ற ஆதரவு குரல்கள் அதிகம் கிளம்பின. இதனால், அவரை அதிமுக சட்டமன்ற தலைவராக அறிவிக்க வேண்டிய நிலை ஓபிஎஸ்சுக்கு ஏற்பட்டது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து தான், பத்திரிகை அறிக்கைகளை கொடுத்து வந்தனர், வருகின்றனர்.

ஆனால், திடீர், திடீரென தனித்தனியாக அவர்கள் கையெழுத்திட்டு அறிக்கை தந்து, 'நாங்க வேற மாதிரி...; எனக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த கூத்தையெல்லாம் கால, காலமாக அதிமுவிற்கு ஓட்டு போடும் வாக்காளர்கள் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ போன்றவர்கள், அதிமுக ஒற்றைத்தலைமை குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர். 'இரட்டை தலைமையை மக்கள் ஏற்கவில்லை; அதிமுகவுக்கு சசிகலா தலைமை ஏற்க வேண்டும்' என முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி பகிரங்கமாக பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.எம்.செய்யது கான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 'தொடர் தோல்விகளில் இருந்து கட்சி வலுப்பெற அதிமுகவில் சசிகலா, டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும்' என்ற தீர்மானம் வடிவம் பெற்றது.

அதுவரை மறைமுகமாக சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வந்த முன்னாள் அமைச்சர்கள் பலர், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து சசிகலா, டிவிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்த துவங்கியுள்ளனர். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

அதிமுகவின் தோளில் ஏறி தமிழகத்தில் காலூன்றிய பாஜக, தற்போது தனித்து போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த தெம்பில், 'இனி திமுக - அதிமுகவிடையே போட்டியில்லை. திமுக- பாஜகவிற்கு இடையே தான் போட்டி' என்று பாஜக தலைவர்கள் பலர் பேச ஆரம்பித்தனர். இந்த பேச்சுகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி தொண்டர்கள் ரசிக்கவில்லை. இதனால் தான், அதிமுக மீண்டும் பலம் பெற அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு ஆபத்பாந்தவனாக யாராவது வரமாட்டார்களா என ஏங்குகிறார்கள்.

அதிமுக வலுப்பெற வேண்டும் என்றால், அமமுகவையும் சேர்க்க வேண்டும். ஆனால், அதை எடப்பாடி அறவே விரும்பவில்லை. பிறகெப்படி அதிமுக வலுப்பெறும்? இந்த கேள்விகளின் தொடர்ச்சியாக மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி.லெட்சுமணனிடம் நாம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, 'கட்சி என்றால் வெற்றி, தோல்வி சகஜம் தான். இரட்டைக்குழல் துப்பாக்கிகள் எனப் புகழப்படும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து தான் நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆகியவற்றைச் சந்தித்தனர். ஆனால், அத்தனையிலும் அதிமுக தோற்று ஆட்சியையும் இழந்திருக்கிறது. இதனால் அதிமுக வெற்றி பெற கடினமாக உழைத்த தொண்டர்கள், போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர் தோல்விகளால் துவண்டு போய் இருக்கிறார்கள். அவர்களை அதிமுக தலைமை உற்சாகப்படுத்தவே இல்லை. இதன் காரணமாக கட்சி இன்னும் வலுப்பெற வேண்டும் என நினைப்பவர்கள், தைரியம் உள்ளவர்கள் அந்த கருத்தை வலியுறுத்துகிறார்கள். அதற்கான கூட்டத்தைத்தான், தேனி எஸ்.பி.எம்.சையது கான் நடத்தியுள்ளார். ஆனால், ஓபிஎஸ்சின் துணிவின்மையும், நம்பிக்கையின்மையும் தான் இந்த கூட்டத்தின் தீர்மானத்தை வலுப்பெறாமல் செய்திருக்கிறது' என்று கூறினார்.

எஸ்.பி.லெட்சுமணன்
எஸ்.பி.லெட்சுமணன்

அதிமுவிற்கு ஒற்றைத்தலைமை வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்களே பேசுகிறார்களே? என்ற கேள்விக்கு, 'அதற்குக் காரணம் இருக்கிறது. சென்னை புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் சேர்ந்துகூட பார்க்கவில்லை. ஏனெனில், அவர்கள் இருவரிடையே ஒற்றுமை இல்லை. அதற்காக ஜெயக்குமார் செய்ததை ஏற்க முடியாது. ஒருவரின் சட்டையைக் கழட்டி இழுத்து வரும் உரிமை யாருக்கும் கிடையாது. இதற்கு சென்னை அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்தியிருக்க வேண்டும். ஆனால், ஜெயக்குமார், ஈபிஎஸ் ஆதரவாளர் என்பதால், தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விஜயபாஸ்கர், வேலுமணி உள்பட 4 முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனையிட்ட போது, தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்ததா? திமுகவில் இருந்து வெளியேறிய துரோகி என எம்ஜிஆரை துரைமுருகன் கடுமையாக விமர்சனம் செய்ததற்கு ஏன் தமிழகம் தழுவிய அளவில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? அதிமுக என்ற இயக்கத்தை உருவாக்கிய தலைவரை திமுக விமர்சனம் செய்ததை எப்படி அதிமுக தொண்டர்கள் சகித்துக் கொள்வார்கள்? அதற்காகத்தான் வேறு தலைமையைத் தேடுகின்றனர். அதற்கான முழுவடிவத்தை ஓபிஎஸ்சால் தர முடியும். ஆனால், அதற்கான பொறுப்பும், துணிச்சலும் ஓபிஎஸ்சிடம் இல்லை. இதன் காரணமாகத்தான் அதிமுக நிர்வாகிகள், இவரை நம்பியா செல்வது என்ற குழப்பத்தில் உள்ளனர்' என்று அவர் கூறினார்.

'விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறுத்ததால் தான் அதிமுகவிற்கு இந்த நிலை, இதை அவர்கள் உணரவேண்டும். நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்' என சசிகலா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவரது ஆசை நிறைவேறப்போகிறதா அல்லது நிராசையாகப்போகிறதா என்ற கேள்விக்கான விடை, ஓபிஎஸ், ஈபிஎஸ்சிடம் தான் இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in