முறுக்கும் ஓபிஎஸ்... முன்னேறும் ஈபிஎஸ்!

அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்?
முறுக்கும் ஓபிஎஸ்... முன்னேறும் ஈபிஎஸ்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷங்கள் எழுவதும், பிறகு அது அப்படியே அமுங்கிப் போவதும் கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசியல் களம் கண்டு வரும் காட்சிகள். ஆனால், இம்முறை ரத்தத்தின் ரத்தங்களே எதிர்பார்க்காத நிலையில், ஒற்றைத் தலைமை சலசலப்புகள் அதிமுகவில் பற்றி எழத் தொடங்கியிருக்கின்றன.

அதிமுகவில் அரசியல் வானிலை திடீரென மாறியிருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து குமுறல்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சூழலில் ஒற்றைத் தலைமை அதிர்வுகள் எழுந்ததன் பின்னணி என்ன?

ஒற்றைத் தலைமை விஸ்வரூபம்

2017-ல் சசிகலாவை ஒதுக்கிவைத்துவிட்டு ஓபிஎஸ்சும் ஈபிஎஸ்சும் இணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக உருவெடுத்தனர். கட்சிக்குத் தலைமை ஓபிஎஸ்; ஆட்சிக்குத் தலைமை ஈபிஎஸ் என அவர்களுக்குள்ளாகவே ஒரு அஜெண்டாவை உருவாக்கினர். ஆட்சிக்குத் தலைமை என்ற வகையில் ஈபிஎஸ் சகல அதிகாரங்களையும் ருசித்தார். ஆனால், கட்சிக்குத் தலைமை என்ற இடத்தில் ஓபிஎஸ்சால் அதிகாரம் செலுத்த முடியவில்லை. அங்கும் ஈபிஎஸ் குறுக்கே நின்றார். கட்சிரீதியாக எந்த முடிவு என்றாலும் அதை ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்தே எடுக்க வேண்டியிருந்தது. இயல்பாகவே ஓபிஎஸ்சை விட ஈபிஎஸ்சுக்கு அதிமுகவில் ஆதரவு அதிகமாக என்பதால் அவரை மீறி ஓபிஎஸ்சால் ஒன்றும் செய்ய முடியாத நிலையே நீடித்தது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலி முதல்வர் வேட்பாளர் ஆவதற்கு முயற்சித்தார் ஓபிஎஸ். அப்போதும் தோற்றுத்தான் போனார். தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்கக் காய் நகர்த்தினார். அதையும் ஈபிஎஸ் கொத்திச் சென்றார். என்றாலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அதிமுக சார்பில் அறிக்கைகள் வெளியிடுவது, கருத்துச் சொல்வது என்று ஓபிஎஸ் அமைதியாகவே அரசியல் செய்து வருகிறார். ஆனால், ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்டு வைக்கும் வகையில் அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை பிரச்சினை, முன்பு போல அல்லாமல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் பின்னணியில் இரண்டு விஷயங்களை அதிமுகவில் பூடகமாகப் பேசுகிறார்கள்.

முதலாவது பின்னணி

அண்மையில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் கிடைப்பது உறுதியானது. அதை முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோருக்கு தரவே ஈபிஎஸ் விரும்பினார். ஆனால், அதை வடக்கு மண்டலத்துக்கு ஒன்று; தெற்கு மண்டலத்துக்கு ஒன்று என்று மாற்றியது ஓபிஎஸ்தான் என்கிறார்கள் அதிமுகவில். அதாவது, தனக்கு ஓரிடம்; ஈபிஎஸ்சுக்கு ஓரிடம் என்று லாவகமாக மாற்றினார் ஓபிஎஸ். வடக்கு மண்டலத்தில் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் மல்லுக்கட்ட, பலமான வன்னியர் லாபியை வைத்து அந்த இடத்தை சி.வி.சண்முகம் பெற்றார்.

தனக்குரிய இடத்தை தன்னுடைய ஆதரவாளரான முதுகுளத்தூர் ஒன்றியச் செயலாளர் தர்மருக்கு வழங்கினார் ஓபிஎஸ். இதில் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளானார் ஜெயக்குமார் என்கிறார்கள் அதிமுகவில். 2017-ல் அதிமுக அணிகள் இணைந்தபோது ஓபிஎஸ்சுக்காக நிதியமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தவர்தான் ஜெயக்குமார். ஓபிஎஸ்சால் தனக்குப் பதவி கிடைக்காமல் போனதாக எண்ணிய ஜெயக்குமார், ஜூன் 14 அன்று கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ‘ஒற்றைத் தலைமை பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது’ என்று கொளுத்திப் போட்டதுதான் இப்போது பற்றி எரிகிறது.

கடந்த காலங்களில் ஒற்றைத் தலைமை பற்றி கட்சி ஆலோசனைக் கூட்டங்களிலும் சரி, தனிப்பட்ட முறையில் நிர்வாகிகள் பேசியிருந்தாலும் சரி, அதையெல்லாம் அடியோடு மறுத்துப் பேசியவர்தான் ஜெயக்குமார். ஆனால், ஆலோசனைக் கூட்டத்தில் பேசியதை வெளியில் சொல்லி ஒற்றைத் தலைமை விவகாரத்தைப் பேசு பொருளாக்கி ஓபிஎஸ் மீதான தன் கோபத்தை ஜெயக்குமார் தீர்த்துக்கொண்டார். இப்படித்தான் அதிமுகவில் தகவல்கள் கரை புரள்கின்றன. இதனால்தான் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமார் மீது கடுங்கோபத்தில் உள்ளனர். அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் காரை மறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆபாச அர்ச்சனை செய்ததற்கும் அதுதான் காரணம். செய்தியாளர்கள் சந்திப்பில், “ஜெயக்குமார் பேசியதால்தான் ஒற்றைத் தலைமை பிரச்சினை பெரிதானது” என்று ஓபிஎஸ் சொன்னதையும் இங்கே நினைவுகூரலாம்.

இரண்டாவது பின்னணி

ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவே செயல்படுகிறது என்ற ஸ்லோகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பாஜகவினரும் முன்னெடுத்து வருகிறார்கள். இதை தொடர்ந்து ஓர் உத்தியாகவே பாஜக பயன்படுத்தி வருகிறது. எனவே, யார் பிரதான எதிர்க்கட்சி என்பதில் அதிமுகவினருக்கும் பாஜகவினருக்கும் கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதுதொடர்பாக ஈபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செய்ததைப் பேசியதோடு தானும் ஓபிஎஸ்சும் எடுத்து வைத்த வாதங்களை எடுத்துச் சொல்லி, அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னார். இந்த விவகாரத்தை மையப்படுத்தி ஓபிஎஸ் 9 பக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

அதில், ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்ட போதெல்லாம் நடந்த அரசின் நடவடிக்கைகள் அல்லது மாற்றங்கள் குறித்து தெரிவித்திருந்தார். அதில் ஓரிடத்தில்கூட ஈபிஎஸ் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்தவே இல்லை. ‘நான்.. நான்’ என்றே அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஓபிஎஸ். இது ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் வகையில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பதில் ஈபிஎஸ்சும் அதிருப்தி அடைந்தார் என்றெல்லாம் அதிமுகவில் பேச்சுகள் அடிபடுகின்றன.

மேலும், இருவரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிடுவது, கட்சியின் இறுதி முடிவைக்கூட ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் எடுக்க முடியாமல் (உதாரணம், மாநிலங்களவை வேட்பாளர் தேர்வு), கோஷ்டி ரீதியில் செயல்படுவது இதுகுறித்தெல்லாம் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆதங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்தச் சிக்கலுக்கு எல்லாம் தீர்வு வேண்டித்தான், பொதுக்குழு கூடும் சூழலில் ஒற்றைத் தலைமை கோஷத்தை ஈபிஎஸ் முகாம் உயர்த்திப் பிடிக்கிறது.

முன்னேறும் இபிஎஸ்

இதெல்லாம் ஒருபுறமிருக்க, சசிகலாவை அதிமுகவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை மறைமுகமாக ஓபிஎஸ் அவ்வப்போது பேசி வருவதையும், அவருடைய ஆதரவாளர்கள் அதை வெளிப்படையான காரியங்கள் மூலம் உணர்த்துவதையும் ஈபிஎஸ் ஆதரவாளர்களால் பொறுக்க முடியவில்லை. ஈபிஎஸ்சுக்கு செக் வைக்கும் வகையில் ஓபிஎஸ்சின் நடவடிக்கைகள் இருப்பதாகவே ஈபிஎஸ்சிடம் அவருடைய ஆதரவாளர்கள் புழுங்கி வருகிறார்கள். ஒற்றைத் தலைமை பற்றிய விவாதம் சூடுபிடிக்க இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

தற்போதைய சூழலில் அதிமுகவை பொறுத்தவரை ஈபிஎஸ் கையே ஓங்கியிருக்கிறது. முதல்வர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று முன்னேறியிருக்கும் அவர், அடுத்ததாக பொதுச்செயலாளர் என்ற நிலையை நோக்கி அடியெடுத்து வைத்திருப்பதாகவே தெரிகிறது. ஒற்றைத் தலைமையை நோக்கி அதிமுக நகர்ந்தால், அந்த இடத்தை தன்னால் பிடிக்க முடியாது என்பதை ஓபிஎஸ் உணர்ந்தே இருக்கிறார்.

அதனால் தான் “இதுவரை நல்லாத்தான் போயிட்டு இருக்கு. எனக்கே தெரியல எதுக்காக இந்த ஒற்றைத் தலைமை பிரச்சினை வருதுன்னு” என்று புலம்பி இருக்கிறார். இதன் மூலம் ஒற்றைத் தலைமையை தான் விரும்பவில்லை என்பதை சூசகமாக உணர்த்தி இருக்கிறார் ஓபிஎஸ். அதையும் மீறி ஈபிஎஸ் தரப்பு ஒற்றைத் தலைமை விவகாரத்தை பொதுக்குழு வரை கொண்டு சென்று பெரிதுப்படுத்தினால், ‘ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர், பரதன் போல செயல்பட்டவர் ஓபிஎஸ்’ போன்ற அஸ்திரங்களை ஏவவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் சென்னையில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்.

கோவை சத்யன்
கோவை சத்யன்

முடிவெடுப்பது கட்சித் தலைமை

ஒற்றைத் தலைமை விவகாரம் இப்படியெல்லாம் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கும் சூழலில் இதுபற்றி அதிமுகவின் கருத்தை அறிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை சத்யனிடம் பேசினோம். “ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ள ஓர் இயக்கத்தில் இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்கள் வரத்தான் செய்யும். கருத்துச் சுதந்திரம் உள்ள இடத்தில் இப்படித்தான் இருக்கும். அப்பாவுக்குப் பிறகு மகன், மகனுக்குப் பிறகு பேரன் என்று செயல்பட மன்னராட்சியா நடந்துகொண்டிருக்கிறது? அதிமுகவில் ஜனநாயக முறையில் அவரவர் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பொதுக்குழு நடைபெறும்போதுதான் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்பதே தெரிய வரும். அதற்கு முன்பே எப்படிச் சொல்ல முடியும்? கட்சியில் ஆயிரம் கருத்துகள் வரும் போகும். முடிவெடுப்பது கட்சித் தலைமை. தலைமை என்ன முடிவை எடுத்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் இயக்கம்தான் அதிமுக” என்று முடித்துக்கொண்டார் கோவை சத்யன்.

முடிவெடுப்பது கட்சித் தலைமை தான். ஆனால், அந்தத் தலைமை யார் என்பது தானே இப்போது பெரும் பிரச்சினையா இருக்கு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in