ஈபிஎஸ் நிழல் இளங்கோவன் நியமனத்திற்கு எதிராக போர்கொடி

பதவியை ராஜினாமா செய்வதாக ஒன்றியச் செயலாளர் அறிவிப்பு
ஈபிஎஸ் நிழல் இளங்கோவன் நியமனத்திற்கு எதிராக போர்கொடி

சேலம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்தார். இச்சூழலில் அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் உட்கட்சித் தேர்தலில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அவரை ஆதரித்து கட்சியினர் பலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் ஈபிஎஸ் மீண்டும் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்படுவார் என சேலம் மாவட்ட அதிமுகவினர் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இச்சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக உள்ள பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவன்
எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவன்

இவரது நியமனத்திற்கு சேலம் மாவட்ட அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை வளையத்தில் இளங்கோவன் பெயர் அடிபடுவதே இதற்கு முக்கிய காரணமாகவும் அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. இச்சூழலில் இளங்கோவன் நியமனத்திற்கு சேலம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வையாபுரி பகிரங்க பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் அதிமுவை அழிக்கும் இளங்கோவனுக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கியிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இளங்கோவனுக்கு தொடர்பிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

கோடநாடு என்பது அம்மா இல்லம். அந்த இல்லத்தை நாங்கள் கோயிலாக மதித்து வருகிறோம். ஆனால் அந்த இல்லத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளையில் இளங்கோவனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடங்களில் தகவல்கள் வெளியாகும் நிலையில் அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை வழங்கியிருப்பது பெரும் வேதனை அளிக்கிறது. இதை எதிர்த்து எனது பதவியை நான் ராஜினாமா செய்ய உள்ளேன். இதே நிலை நீடித்தால் நான் மட்டுமல்ல என்னைப் போல பல ஒன்றிய செயலாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வர்" என்றார்.

எடப்பாடி பழனிசாமியின் நண்பர், நிழல் என புகழப்படும் இளங்கோவன் நியமனத்திற்கு எதிராக கிளம்பியுள்ள குரல் இபிஎஸ்சுக்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.