
"நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் வீட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்" என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு சொத்து வரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையிலும், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, "நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் முதல்வர் ஸ்டாலின் வீட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார். மில்களில் வேலை இல்லை. தொழிற்சாலைகளில் வேலை இல்லை, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. இப்படி மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழ்நிலையில் வேண்டுமென்றே திட்டமிட்டு சொத்து வரி சுமையை திமுக அரசு சுமத்தியிருக்கிறது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும், புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் இப்படி வரி உயர்வு உயர்த்தப்படும் போதெல்லாம் மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்வார்கள். எப்போது உயர்த்த வேண்டும்? அதனால் மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா? பாதிப்பு ஏற்படுமா? என்பதையெல்லாம் ஆராய்ந்து அதற்கேற்றவாறு வருகை உயர்த்துவார்கள்.
ஆனால் இன்றைய அரசாங்கத்துக்கு மக்களைப் பற்றிய கவலை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொன்னதாக சொல்கிறார்கள். அப்படி எதுவும் மத்திய அரசு சொல்லவில்லை. சொத்து வரி உயர்த்தப்படாது என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு அதற்கு மாறாக இப்போது கடுமையாக உயர்த்திருக்கிறார்கள். இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பேசினார்.