அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் தர்ணா; கொந்தளித்த துரைமுருகன்: அதிரடி காட்டிய சபாநாயகர்!

அதிமுக எம்எல்ஏக்கள் பேரவையில் தர்ணா; கொந்தளித்த துரைமுருகன்: அதிரடி காட்டிய சபாநாயகர்!

சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகர் இருக்கையின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், "சட்டப்பேரவையில் ஒரு விரும்பத்தகாத ஒரு நிகழ்வை இன்றைக்கு எதிர்க்கட்சிகள் நிறைவேற்றி இருக்கிறார்கள். தங்கள் கோரிக்கையை புரிந்து கொண்டு அவர்களை தங்களுடைய அறையில் வைத்து சபாநாயகர் பேசி இருக்கிறார். அவர்களுக்கு தகுந்த பதிலைச் சொல்லி அதைப் பற்றி கவனிப்பதாக தெரிவித்து இருக்கிறீர்கள். அதன்பிறகு சபையில் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து பேசியவுடன், தாங்கள் கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசுவதற்கான வாய்ப்பு தருகிறேன் என்று பலமுறை வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளை புறக்கணித்துவிட்டு அவர்கள் கோஷம் போட முற்பட்டார்கள். ஆக, தாங்கள் இந்த அவையில் சொன்னதுபோல் திட்டமிட்டு சபைக்கு வந்து இப்படிப்பட்ட ஒரு கபளிகரத்தை உருவாக்கி விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அதிமுக உறுப்பினர்கள் இங்கு வந்ததாக தெரிகிறது.

அது மட்டுமல்ல, இன்றைக்கு முதல்வர் இந்து திணிப்பை எதிர்த்து ஒரு தீர்மானத்தை இங்கே படிக்க இருக்கிறார். இந்தி எதிர்ப்பு தீர்மானம் என்பது மிகவும் முக்கியமானது. இந்தி எதிர்ப்பது என்பது நமது உயிரோடு கலந்துவிட்ட ஒன்று. உணர்ச்சி உள்ளவன், தமிழனாக இருப்பவன், தன் உடலில் ஓடுவது தமிழன் என்கிற தன்மான ரத்தம் என்றால் அவர்கள் எல்லாம் இந்த அவையில் உட்கார்ந்து, அதற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். அதையும் புறக்கணித்துவிட்டு, இந்திய வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்ற மனோபாவத்துடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநடப்பு செய்வதற்கு கூட முறைகள் உண்டு. ஆனால் மீண்டும் இங்கு வரிசையாக உட்கார்ந்து கொண்டு வெளியே போவதற்கு காவலரோடு முரண்படுவது அநாகரிகமான செயலாகும். எனவே இவற்றையெல்லாம் தாங்கள் மனதில் கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதையடுத்து, சட்டப்பேரவை இன்றைய கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in