`நாட்டுநடப்பே தெரியவில்லை'- அன்புமணியைச் சாடும் அதிமுக எம்.எல்.ஏ

அருண்மொழித்தேவன் எம்எல்ஏ
அருண்மொழித்தேவன் எம்எல்ஏ

நெருங்கிய தோழர்களாக இருந்து வந்த அதிமுக - பாமக இடையே அண்மைக்காலமாக  மோதல் அதிகரித்துவரும் நிலையில் அதிமுகவைச் சேர்ந்த புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் அதை மேலும் அதிகரிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸை தாக்கிப் பேசியுள்ளார்.

அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் சென்னை தலைமை செயலகத்தில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடலூர் மாவட்டத்தில் என்எல்சிக்காக தங்கள் விவசாய நிலங்களை, வீடுகளை கொடுத்தவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சம அளவில் இழப்பீடு வழங்கக்கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இற்காக அரசு செயலாளர், அந்த மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனவும், அக்குழுவின் முதல் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த குழு  அறிவிக்கப்படவே இல்லை.

இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து 15 முறைக்கும்மேல் நிலஎடுப்பு என்ற பெயரில் அதிகாரிகள் மக்களை வற்புறுத்துவதால் அங்கு தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், அந்த பகுதி மக்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் நெய்வேலியில் கடந்த டிசம்பர் 17 -ம் தேதி முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

எடப்பாடி பழனிசாமி,  கடலூர் மாவட்ட விவசாயிகள் மீது அக்கறை கொண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதில் புவனகிரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளும் வருகிறது.  மேலும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சிகளுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆனால் நெய்வேலி என்எல்சி விவகாரத்தில் பாமகவைச் சேர்ந்த  அன்புமணி ராமதாஸ் மட்டுமே குரல் கொடுத்து வருவதாக பேசியிருப்பது அவர் மட்டுமே போராடி வருவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தனக்கு மட்டும் அக்கறை இருப்பது போல அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது மிகுந்த வருத்தத்துக்குரியது, கண்டனத்துக்குரியது.

வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல், தான் மட்டுமே போராடி வருவதைப்போன்று தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அன்புமணி எதை நினைத்துக்கொண்டு வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால் எங்கள் தலைவரை பற்றி தவறாக மக்கள் மத்தியில் பேசுவது என்பது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

அன்புமணி ராமதாஸுக்கு நாட்டு நடப்பு தெரியவில்லை. கனவு உலகத்திலிருந்து பூமிக்கு வந்ததைப்போல நடந்ததெல்லாம் தெரியாமல் இவர் மட்டுமே போராடுவதாக பேசுகிறார்.  நிலைமை அப்படி இல்லை, அதிமுக சார்பில் அதிகமான போராட்டங்களை நடத்தி இருக்கிறோம். தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.  இதையெல்லாம் மக்கள் நன்கு அறிவார்கள்" என்றார்.

முதலில் அமைச்சர் ஜெயக்குமார்  பாமகவை  விமர்சனம் செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்ட செயலாளர் அதுவும்  வட மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்  பாமகவுக்கு எதிராக பேசியிருப்பது இரண்டு கட்சிகளுக்கு இடையே விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in