`ஒற்றைத் தலைமையை ஏற்க இதைச் செய்யுங்கள்': ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ்சை வலியுறுத்தும் முன்னாள் அமைச்சர்

கு. ப.கிருஷ்ணன்
கு. ப.கிருஷ்ணன்

ஈபிஎஸ்சோ, ஓபிஎஸ்சோ எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத்தில் தேர்தலை சந்தித்து தொண்டர்களால் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையேற்கட்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம் பெற்றவர். அதற்குப்பின் கட்சியில் இருந்து விலகி தனி இயக்கம் கண்டார். தேமுதிக உருவானபோது தேமுதிகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்கு பிறகு அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவர். தற்போது நடந்து வரும் ஒற்றைத் தலைமை பிரச்சினையில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று அவர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது யாராக இருந்தாலும் தொண்டர்களை சந்தித்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒற்றைத் தலைமைக்கு வரட்டும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ``அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பார்கள். முன்பு இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களேதான், இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். இன்றைய தேதியில் அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள்தான். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? அதில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் யாரோ அவர் ஒற்றைத் தலைமையேற்கட்டும்.

எம்ஜிஆர் காட்டிய வழியில் அதிமுக பொதுக்குழு நடைபெற வேண்டும். அதிமுக தலைமை தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் யாரோ அவரே ஒற்றைத் தலைமையேற்கட்டும்.

நான் யாருக்கும் ஆதரவானவன் இல்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு நானேகூட போட்டியிடுவேன். எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் உள்ளது. எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அப்படி இல்லையெனில் அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன்" என்று கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in