ஒதுங்கியது திமுக... போட்டியின்றி தேர்வான அதிமுக உறுப்பினர்

தேர்தல் முடிந்ததால் அதிகாரிகள் நிம்மதி
ஒதுங்கியது திமுக... போட்டியின்றி தேர்வான அதிமுக உறுப்பினர்

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவியை அதிமுக மீண்டும் கைப்பற்றியது. வேட்புமனு யாரும் அளி்க்காததால் அதிமுகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இதன் தலைவராக இருந்த வரதராஜன் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவி மற்றும் அவர் உறுப்பினராக இருந்த 15வது வார்டும் காலியானது. தொடர்ந்து காலியாக இருந்த 15வது வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவர் வெற்றி பெற்றார். இதனால் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், இருமுறை தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் ஒத்தி வைப்புக்கு ஆளுங்கட்சிதான் காரணம் என புகார் எழுப்பியும், தேர்தலை நடத்தக்கோரியும் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா, ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணியும் தன் பங்குக்கு தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்த வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருந்தார்.

அதேவேளையில் திமுக தரப்பில் தேர்தல் ஒத்தி வைப்புக்கு நாங்கள் காரணமில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் மார்ச் 7ம் தேதி (இன்று) எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது.

தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 11வது வார்டு உறுப்பினர் வி.சங்கீதா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுக இத்தேர்தலில் பங்கேற்கவில்லை. எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அதில் அதிமுக 8, பாஜக 1, சுயேச்சை மற்றும் 5 திமுக உறுப்பினர்களும் உள்ளனர். ஓராண்டுக்குப் பின் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதால் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in