ஜுன் 23-ல் அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஈபிஎஸ்: தேதி குறிப்பிட்டு பற்றவைத்த நாகர்கோவில் அதிமுக நிர்வாகி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இடையேயான பனிப்போர் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒற்றைத் தலைமையை நோக்கி இருதரப்புக்கும் இடையே முட்டல், மோதல்கள் உச்சம் தொட்டுள்ளது. இதுவரை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் அவர்களை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டிவந்தனர்.

நாகர்கோவில் நகரச் செயலாளர் சந்திரன் ஒருபடி மேலேபோய், திரைப்படங்களின் வெளியீட்டு தேதியைப் போடுவது போல் விரைவில் என தேதி குறிப்பிட்டு எடப்பாடி தலைமையில் கழகம் என போஸ்டர் ஒட்டியுள்ளார். இதில் அதிமுக மூத்தத் தலைவர்களில் ஒருவரான தளவாய் சுந்தரம் படமும் இடம்பெற்றுள்ளது.

நாகர்கோவிலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
நாகர்கோவிலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

அதிமுகவைப் பொறுத்தவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து வருகிறது. ஒருகட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வாகினர். ஆட்சிக்கு எடப்பாடி... கட்சிக்கு ஓ.பி.எஸ் என ஆட்சி இருந்தவரை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அதிமுக எதிர்கட்சி வரிசையில் வந்தபோது, எதிர்கட்சித் தலைவர் பதவியும் எடப்பாடி பழனிச்சாமி வசமானது. இப்போது கட்சித் தலைமையையும் குறிவைத்து எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்திவருகிறார்.

இருதரப்புக்கும் இடையே நீருபூத்த நெருப்பாக பனிப்போர் தொடர்ந்தே வருகிறது. அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலிலும் அது எதிரொலித்தது. எடப்பாடி பழனிச்சாமி அணியில் தீவிரம்காட்டும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எடப்பாடியும், தர்ம யுத்தத்தின் போது தன் பின்னால் நின்ற அதிமுகவின் முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தர்மருக்கு ஓ.பி.எஸ்ஸும் வாய்ப்பு வழங்கினர். அதுவரை எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கியிருந்த நிலையில், ஓ.பி.எஸ் தன் தரப்பில் ஒருவருக்கு விடாப்பிடியாக நின்று வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது அவரது ஆதரவாளர்களையும் உற்சாகப்படுத்தியது.

அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடக்கிறது. இதில் ஒற்றைத் தலைமை அறிவிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகரப் பகுதி முழுவதும் அதிமுக நிர்வாகி சந்துரு என்ற ஜெயச்சந்திரன் ஒட்டியுள்ள போஸ்டரில், விரைவில் 23.06.2022, கழகம் ஒற்றைத் தலைமையை நோக்கி ஒன்றரை கோடி தொண்டர்களும் மக்களின் முதல்வர் ஈ.பி.எஸ் தலைமையில் என போஸ்டர் ஒட்டியுள்ளார். இதில் ஓ.பன்னீர் செல்வம் படமும், அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் படமும் இடம்பெற்றுள்ளது.

நாகர்கோவிலை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஓ.பி.எஸ்ஸின் தர்மயுத்தத்தின் போது பக்க, பலமாக நின்ற எஸ்.ஏ.அசோகன் உள்ளார். இதனால் அந்தத் தரப்பு ஓ.பி.எஸ்ஸை முன்னிறுத்தி பதில் போஸ்டர் ஒட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in