உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அதிமுக தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

முன்னரே இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது, மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டி அதிமுக முன்னணி தலைவர்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்பதற்காக நீதிமன்றப் படியேறியவரான ஓபிஎஸ், இந்த தீர்ப்பு குறித்து 'தர்மம் வென்றிருக்கிறது' என்று கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஈபிஎஸ் ஆதரவாளரான பொள்ளாச்சி ஜெயராமன், எது தர்மம் எது அதர்மம் என்பது அனைவருக்கும் தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.


"ஒற்றைத் தலைமைக்கான சட்ட நடவடிக்கை தொடரும், நீதிமன்ற அனுமதியுடன் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும்" என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித்தார்.

``ஒற்றைத் தலைமுறை குறித்து விவாதிக்கலாம், அதற்கு எதுவும் தடையில்லை. அதனால் நிச்சயமாக விவாதிக்கப்படும்'' என்றிருக்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன்.

``பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை ஆளும் கட்சியாக மாறுவதற்கு என்ன செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இந்த பொதுக்குழு முடிவு செய்யும். ஒன்றரை கோடி தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும். அதிமுகவை ஆளுங்கட்சியாக ஆக்க வேண்டும். அதற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது பொதுவான கருத்து. அதைத்தான் அனைவரும் பிரதிபலிக்கிறார்கள்" என்கிறார் முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன்.

``அதிமுக தொண்டர்களின் மனதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது'' என்றிருக்கிறார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத்.

``அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. இதனால் ஒற்றைத் தலைமை குறித்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை'' என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

"ஒற்றைத் தலைமை என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஏகோபித்த தொண்டர்கள் அனைவரின் கருத்தும் ஆகும். அது குறித்து இன்று விவாதம் நிச்சயம் நடைபெறும். இது பின்னடைவு இல்லை. சற்று காலதாமதம் அவ்வளவுதான்" என்கிறார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

எல்லாருடைய கருத்துக்களுக்குமான பதில் பொதுக்குழுவின் முடிவில் தெரியவரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in