அதீத சுறுசுறுப்பில் அதிமுக... அத்தனை சுலபமாய் விட்டுவிடுமா திமுக?

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

மதுரை மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி முடித்த தெம்புடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ். அதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கூட்டணியை இறுதி செய்ய டெல்லி பயணம் என சுறுசுறுப்பாகி இருக்கிறார்.

மதுரை மாநாட்டில் ஈபிஎஸ்
மதுரை மாநாட்டில் ஈபிஎஸ்

அதிமுக மாநாட்டை மிரட்டலாக நடத்திக் காட்டியதன் மூலம் பாஜகவுக்கும் திமுகவுக்கும் தன்னுடைய பலத்தை நிரூபித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஈபிஎஸ். அதனால்  தற்போது யார் யாருக்கு எந்த முகத்தைக் காட்ட வேண்டுமோ அந்த முகத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

அதாவது, பாஜகவுக்கு ஆதரவு முகத்தையும், திமுகவுக்கு எதிர்ப்பு முகத்தையும் பளீரெனக் காட்டத்தொடங்கியிருக்கிறார். பாஜகவின்  ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிக்கும் அதேசமயம், உதயநிதி ஸ்டாலினையும்  திமுக ஆட்சியையும் கடுமையாகச் சாடுகிறார் ஈபிஎஸ்.                        

அகில இந்திய அளவில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசப்படும் நிலையில் இங்கே தமிழ்நாட்டில் அவரை எதிர்த்து அரசியல் செய்தால்தான் இப்போதைக்கு தங்கள் இருப்பைத் தக்கவைக்க முடியும் என்பதால் அதிலிருந்தே தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளார் ஈபிஎஸ். 

சனாதன சர்ச்சைக்குள் சிக்கி இருக்கும் உதயநிதியை மிகத் தீவிரமாக எதிர்ப்பதன் மூலம் அதிமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்க முடியும். இன்னொருபக்கம், இதனால்  அகில இந்திய அளவில் கவனம் பெறுவதோடு பாஜகவின் நட்பையும் பலமாக்கலாம் என எண்ணுகிறார் ஈபிஎஸ். அதனால் உதயநிதி எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தும் அவர், உதயநிதி மீது மான நஷ்ட வழக்கும் தொடர்ந்திருக்கிறார். கூடவே, தன்னைப் பற்றி பேசுவதற்கு உதயநிதிக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கும் ஈபிஎஸ், இதன்மூலம் உதயநிதியை கோடநாடு விவகாரம் குறித்து பேசவிடாமல் செய்துவிடலாம் என திட்டமிடுகிறார்.

மக்களின் கவனத்தைப்பெற வேண்டுமானால் அதிரடி அரசியல் செய்வதோடு மட்டுமல்லாது அசுர பலத்துடன் இருக்கும் திமுகவையும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்கச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்துடன் தான், தமிழகத்தில் தினமும் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறார் ஈபிஎஸ். 

அடுத்த நடவடிக்கையாக, தங்களைவிட்டுப் பிரிந்து சென்ற துடிப்பான இளைஞர்களையும் பிற முக்கிய தலைகளையும் மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வரவும் நிர்வாகிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் ஈபிஎஸ். குறிப்பாக, அமமுக, ஓபிஎஸ் அணிகளில் இருப்பவர்களை வெகுசீக்கிரம் கட்சிக்குள் கொண்டுவர உத்தரவிட்டிருக்கிறாராம். கட்சிப் பதவிகளை பரவலாக்கும் விதமாக இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிப்பது குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பிரதானமாக விவாதித்திருக்கிறார் ஈபிஎஸ். இந்த நடவடிக்கையானது கட்சியை பலப்படுத்தவும் தேர்தல் பணிகளை எளிதாக மேற்கொள்ளவும் உதவும் என்பது அவரது கணக்கு.

இன்னொரு முக்கியமான விஷயம்... கோடநாடு வழக்கை வைத்து ஈபிஎஸ்ஸை திமுக மிரட்டிக்கொண்டிக்கிறது. ஜெயலலிதாவின் கார் டிரைவராகப் பணியாற்றிய கனகராஜின் அண்ணன் தனபால், சமீபத்தில் பல திடுக்கிடும் தகவல்களை  வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரில்தான் கோடநாடு பங்களாவிலிருந்து 5 பைகளை எடுத்துவந்ததாக கனகராஜ் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதில் சொத்து ஆவணங்கள் நிறைய இருந்ததாகவும் தெரிவித்த தனபால்,  5 பைகளில் 2 பைகளை சேலத்திலும், 3 பைகளை சங்ககிரியிலும் உள்ள முக்கிய புள்ளிகளிடம் கனகராஜ் கொடுத்ததாகவும் பரபரப்புக் கிளப்பினார்.

கோடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை காட்டிக்கொடுக்க வேண்டாம், அதற்காக எவ்வளவு பணம் வேண்டும் என்று தன்னிடம் பேரம் பேசப்பட்டதாகவும் தெரிவித்த தனபால், ”நான் பணத்திற்கு ஆசைப்படுபவன் இல்லை என்பதால் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.  கோடநாடு வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்” என்று தெரிவித்தார். இப்படி தனபாலை திமுக கையிலெடுத்து ஈபிஎஸ்ஸுக்கு நெருக்கடி உண்டாக்குகிறது. இதை சமாளிக்க தனபாலின் மனைவியை அதிமுக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது. 

தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக சேலம் எஸ்பி-யிடம் தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வியை புகார் அளிக்க வைத்ததில் அதிமுகவினரின் புன்புலம் உண்டு. ”கோடநாடு கொலை வழக்கை பொறுத்தவரை என் கணவர் பேசுவதெல்லாம் எனக்கு தெரிந்தவரை உண்மை இல்லை. கோடநாடு வழக்கு தொடர்பாக அவரிடம் எந்த ஆதாரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கனகராஜ், மரணத்திற்கு 6 மாதம் முன்புவரை என் கணவருடன் பேசாமல் இருந்தார். அதற்கு பிறகு என்ன பேசினார்கள் என்று எனக்குத் தெரியாது. என் கணவர் யாரோ சொல்லிக்கொடுத்து சொல்வதுபோல் உள்ளது. இதுவரை இதுபற்றி எந்த விஷயத்தையும் வீட்டில் பேசியது இல்லை. ஆனால் இப்போது இதுபற்றி புதிதாக அவர் சொல்கிறார்” என்று சொல்லி இருக்கிறார் தனபாலின் மனைவி. அவரை இப்படிப் பேசவைத்து எடப்பாடிக்கு எதிரான தனபாலின் குற்றச்சாட்டுக்களை நீர்த்துப்போகச் செய்யும் வேலையை அதிமுக செய்தது.

இதனிடையே சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், “கனகராஜின் அண்ணன் தனபால், தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். கனகராஜ் இறப்பதற்கு முன்பு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே என்னிடம் சில பைகளை கொடுத்ததாக கூறியிருக்கிறார். அது முற்றிலும் தவறானது” என்று தனபாலுக்கு எதிராக சேலம் எஸ்பி-யிடம் புகார் கொடுத்தார். 

இப்படி, ஒருபக்கம் திமுகவை சமாளித்துக்கொண்டே அதிமுகவை கட்டுக்கோப்பாக கொண்டு செலுத்துவதிலும் கவனம் செலுத்தும் ஈபிஎஸ், பாஜகவுடனான நெருக்கத்தையும் அதிகரித்து வருகிறார். அண்ணாமலையுடன் லேசான பிணக்கு இருந்தாலும் டெல்லி தலைவர்களுடன் இணக்கமாகவே இருக்கிறார் ஈபிஎஸ். கடந்த 14-ம் தேதி டெல்லிக்குப் பயணம் மேற்கொண்ட ஈபிஎஸ், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்தித்து மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பூர்வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டு வந்திருக்கிறார்.

அண்மைக்காலமாக மத்திய அரசுக்கு ஆதரவான அறிக்கைகள் ஈபிஎஸ் தரப்பிலிருந்து அதிகம் வெளிவருகின்றன. வழக்குகளில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும், திமுகவை சமாளிக்கவும் இப்போதைக்கு பாஜகவை விட்டால் தங்களுக்கு வேறு வழியில்லை என்பதை ஈபிஎஸ் நன்றாகவே உணர்ந்திருப்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. 

அதிமுகவின் இந்த அதிரடி ஆட்டம் குறித்து அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனிடம் பேசினோம். “அதிமுக எப்போதுமே சுறுசுறுப்பாகத்தான் இயங்கி வருகிறது. தேர்தலுக்காக மட்டும் இயங்கும் கட்சி இதுவல்ல. மக்களின் நலனுக்காகவே தொடங்கப்பட்டு, இன்றளவும் அதே நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. உதயநிதி பேசுபொருளாக இருப்பதால் அவரை எதிர்த்து வழக்குத் தொடுக்கவில்லை. எடப்பாடியாரை அவதூறாக பேசினார். அதனால்தான் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

ஓ.எஸ்.மணியன்
ஓ.எஸ்.மணியன்

கோடநாடு வழக்கில் எங்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அதனால்தான் சிபிஐ விசாரணைக்கு அனுப்புங்கள் என்று கேட்கிறோம். அப்படி இருக்கும்போது தனபாலை வைத்து எதையாவது செய்யலாம் என்று பார்க்கிறார்கள். அதெல்லாம் எடுபடாது. தேர்தலை நோக்கிய எங்கள் பயணம் வெற்றிகரமாக செல்கிறது.

எப்போது இந்த ஆட்சி போகும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். எடப்பாடியார் மீதும், அதிமுக மீதும் மக்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்பதால் மக்களிடம் நாங்கள் தைரியமாக வாக்குக் கேட்டுச் செல்வோம். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியாத திமுக எந்த முகத்தை வைத்துக்கொண்டு மக்களைச் சந்திக்கும்? 2014-ல் பெற்ற அதே வெற்றியை 2024 தேர்தலிலும் அதிமுக கூட்டணி பெறும்” என்று சொன்னார் அவர்.                   

துரத்தும் வழக்குகள், திமுகவின் நெருக்கடிகள், உட்கட்சிக் குடைச்சல்கள், கூட்டணி கும்மாங்குத்துகள் என அனைத்தையும் சமாளித்து மக்களவைத் தேர்தலுக்கு தன்னையும் கட்சியையும் தயார்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவரை அத்தனை எளிதில் முன்னேற விட்டுவிடுமா ஆளும் திமுக என்பதை அடுத்து வரும் நாட்கள் சொல்லும்!   

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in