அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அவசர முறையீடு!

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் அவசர முறையீடு!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் முறையீடு செய்துள்ளார்.

சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையில் இரண்டு தரப்பினரும் கற்கள், கட்டைகளுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 காவலர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், இரண்டு தரப்புக்கும் காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறித்து வரும் 23-ம் தேதி விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். நீதிபதி சதீஷ்குமார் முன்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி முறையீடு செய்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை நாளை விசாரிப்பதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in