முதல்வர் ஸ்டாலின்- ஈபிஎஸ்- ஓபிஎஸ் காரசார வாதம்: சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்முதல்வர் ஸ்டாலின்- ஈபிஎஸ்- ஓபிஎஸ் காரசார வாதம்: சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் - ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட போது, காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், “பிரதான எதிர்க்கட்சி அதிமுக. அதன் தலைமைக் கழகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயற்சித்தனர். தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி காவல்துறையில் புகார் அளித்தோம். ஆனால் காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை” என்றார்.

அதற்கு பதிலளித்த பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ’அன்றைய தினம் நடைபெற்றது உட்கட்சி விவகாரம். வெளியே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பாதுகாப்பு கொடுத்தோம். உள்ளே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், “சட்டமன்றத்தில் பிரச்சினை வேறு திசையை நோக்கி செல்கிறது. அன்று நடந்த சம்பவம் வேதனை அளிக்க கூடியது. தலைமைக்கழகம் சென்று அமைதியாக அமர வேண்டும் என்று தான் சென்றோம். தலைமைக்கழகத்திற்கும் இந்தியன் வங்கிக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருந்த நிலையில், 300 பேர் தலைமைக்கழகத்திற்கு பூட்டு போட்டுவிட்டு சாலையில் அமர்ந்திருந்தனர்.

இந்தியன் பேங்க் வரும்போது பெரிய கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. அன்று நடைபெற்ற வன்முறை வெறியாட்டத்தை யார் செய்தது என்பதை காவல்துறை விசாரித்து வருகிறது. யார் அத்துமீறியது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு.

யார் வெறியாட்டம் நடத்தினார்கள் என்பதை தனி மேடை போட்டுக் கூட பேச தயாராக இருக்கிறேன். அதிமுக பொதுக்குழு நடந்தபோது 8 மாவட்ட செயலாளர்கள் அதிமுக தலைமைக்கழகத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?” என்றார்.

பேரவையில் ஓபிஎஸ்
பேரவையில் ஓபிஎஸ்

அவருக்குப் பின் பேசிய ஈபிஎஸ், “இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறும் என்று கருதிதான் காவல்நிலையத்தில் முன்னதாகவே புகார் அளித்தோம். காவல்துறை உரிய பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது” என்றார்.

ஈபிஎஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரச்சினை குறித்து முறைப்படி தமிழக காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே இந்த பிரச்சினையில் காவல்துறை எதுவும் தலையிடவில்லை” எனக் கூறினார்.

இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in