' சைலன்ட் மோடிற்குப் போய் விட்டது அதிமுக!'

கலாய்க்கும் பாஜக தலைவர்
' சைலன்ட் மோடிற்குப் போய் விட்டது அதிமுக!'

பாஜக துவங்கி இன்றோடு 42 ஆண்டுகளாகி விட்டது. இதையொட்டி பாஜக சார்பில் மதுரை நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் உள்ள வாசகங்கள் திமுகவினரை மட்டுமின்றி அதிமுகவினரையும் கோபத்தைக் கிளறி விட்டுள்ளது.

” பாஜக துவங்கப்பட்ட நாள் ஏப்ரல்-1, 1980, தமிழகத்தில் பாஜக ஆட்சி துவங்கும் நாள் ஏப்ரல்- 6, 2026" என்ற வாசகங்களுடன் காட்சி தரும் போஸ்டர் தான் இந்த கோபத்திற்குக் காரணம்.

இதுதொடர்பாக பாஜக மதுரை நகர் மாவட்டத் தலைவர் டாக்டர் சரவணனிடம் பேசினோம். அதிமுக உங்களுடன் கூட்டணியில் இருக்கிறதா? இல்லையா? அடுத்து தமிழகத்தில் பாஜக ஆட்சி என போஸ்டர் ஒட்டியுள்ளீர்களே என்று அவரிடம் கேட்டதற்கு," அதிமுக சைலன்ட் மோடிற்குப் போய் விட்டது. ஆனாலும், நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். திமுக, அதிமுக இரண்டு கட்சியில் இருப்பவர்களும் ஆட்சியில் இருக்கும் போது மட்டும் தான் கரைவேட்டி கட்டிக் கொண்டு வெளியே வருவாங்க. ஆட்சியில் இல்லாவிட்டால் சைலன்ட்டாகி விடுவார்கள். திமுகவினராவது கொஞ்சம் வெளியே வருவார்கள். அதிமுக மொத்தமாக சைலன்ட்டாகி விடும். இது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். அதனால் தான் அடுத்து பாஜகவிற்கு வாய்ப்பு தருவர்கள் என்று நம்புகிறோம். பொதுமக்களிடம் இப்போது விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செய்த முறைகேடுகளை வாட்ஸ் அப்பில் எனக்கு அனுப்பி வருகிறார்கள். அவற்றைக் கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளேன். 500 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக்கூடாது என்ற எண்ணம் மக்களுக்கு வந்துள்ளது. எனவே, தமிழகத்தில் பாஜக கட்டாயம் ஆட்சி அமைக்கும் என்பதால் போஸ்டர் வெளியிட்டுள்ளோம்" என்றார்

டாக்டர் சரவணன்.
டாக்டர் சரவணன்.

அடுத்து வரும் 15 நாட்கள், மத்திய தலைமை நமக்கு வகுத்து கொடுத்திருக்கும் திட்டங்களை ஆர்வத்துடனும், கவனத்துடனும் செய்து முடிப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூறியுள்ளாரே? அப்படி என்ன ரகசிய திட்டத்தைச் செய்யப்போகிறீர்கள் என்று கேட்டோம். “ ‘இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்’ என்ற திட்டத்தின்படி ஒரு பாஜக தொண்டருக்கு 25 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்பத்தலைவரின் செல்போன் எண்ணை வாங்குவது, அன்றாடம் அவர்களுக்கு காலை வணக்கம், இரவு வணக்கம் அனுப்புவதோடு மட்டுமின்றி மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசின் திட்டங்களைத் தங்கள் திட்டம் போல செய்யும் திமுகவின் மோசடிகளை அவர்களிடம் கொண்டு செல்வோம் ” என்றார்.

ஆளுங்கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவது தான் தமிழக பாஜகவின் நோக்கமா என்று கேட்டதற்கு, “ ஆமாம். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 எம்பிக்கள், அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் 150 எம்எல்ஏக்கள் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். அதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

Related Stories

No stories found.