அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்… ஓபிஎஸ் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்… ஓபிஎஸ் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்ற போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும் . ஆனால் ஜூலை 11-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் தொடர்பாக திங்கள் மாலைதான் தனக்கு தகவல் கிடைத்தது. உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனுவை ஜூலை 6-ம் தேதி (புதன் கிழமை) விசாரிப்பதாக அறிவித்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு சுட்டிக்காட்டியது.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பை பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவு பிறப்பித்தார். பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பின்பு ஜூலை 7-ம் தேதி (இன்று) பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணசாமி தலைமையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஜூலை 11-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என ஜூன் 23-ம் தேதியே அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஒபிஎஸ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பதிலளிக்க ஒரு வார அவகாசம் வேண்டும். ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை கோரிய கூடுதல் மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ள நிலையில் மீண்டும் அதே கோரிக்கையை எழுப்ப முடியாது. இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் இருந்த கூடுதல் மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என வாதங்களை முன் வைத்தது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை கேட்பதற்கான காரணங்கள் எந்த நீதிமன்ற பார்வைக்கும் செல்லவில்லை. சட்டவிதிகளின் படியே பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கே உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டது சட்ட விதிகளுக்குட்பட்டதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும். பொதுக்குழு நோட்டீஸ் செல்லுமா என்பதை விவாதிக்க வேண்டும். பொதுக்குழு உட்பட எந்த கூட்டம் நடந்துவதற்கு ஒருங்கிணைப்பாளர்களின் ஒப்புதல் தேவை. ஒருங்கிணைப்பாளரின் அதிகாரத்தை அவைத்தலைவர் உட்பட யாரும் பறிக்க முடியாது என கூறப்பட்டது.

அதிமுக நடத்தும் அனைத்து கூட்டங்களும் முறையாக நோட்டீஸ் அனுப்பி தான் நடத்தப்படுகிறதா? 23-ம் தேதி நடந்த பொதுக்குழுக்கூட்டத்தின் நீட்சியாகவே 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படுகிறதா ? பொதுக்குழுவுக்கு தடை கேட்பதற்கு பதிலாக நிவாரணம் கேட்கலாமே என நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு," கடந்த பொதுக்குழுக் கூட்டத்தின் தொடர்ச்சி இல்லை. இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்யவே இந்த பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு நோட்டீஸில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருப்பதாக கூறவில்லை. ஜூலை 11 பொதுக்குழு நோட்டீஸில் எவர் கையெழுத்தும் இல்லை. தலைமைக் கழக நிர்வாகிகள் என மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. தலைமை நிலைய நிர்வாகிகள் என்ற அமைப்பே கட்சியில் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு, இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படவில்லை என தற்போது பொதுக்குழுவை கூட்டியுள்ளது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட முடியவில்லை எனக் கூறும் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி, தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் கூறியே வழக்கு தொடர்ந்தார்" என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதம் தொடங்கியது." கட்சி விதிகளின்படி கடந்தாண்டு தேர்தல் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாதது விதி மீறல். அதனால், தற்போதைய நிலை தொடர உத்தரவு பிறப்பித்து, பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும். பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கடந்த பொதுக்குழுவின் நீட்சி அல்ல இது. இது சிறப்பு பொதுக்குழு" என்று தெரிவிக்கப்பட்டது.

"ஜூன் 23- ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும் போது ஜூலை 11 பொதுக்குழு அறிவிப்பை தமிழ்மகன் உசேன் எப்படி அறிவிக்க முடியும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு," பதில் மனுவாக தாக்கல் செய்கிறோம். பொதுக்குழுக்கூட்டம் நடைபெறட்டும். மற்ற விவகாரங்கள் குறித்து பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு பார்த்து கொள்ளலாம். பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் மனு விசாரணைக்கு உகந்ததா என ஆய்வு செய்ய வேண்டும். கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இன்றைய நிலையில் கட்சியில் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ இல்லை. கட்சி விதிகளைத் திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு தான் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, "உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மற்ற இடைக்கால நிவாரணம் தொடர்பாக தனி நீதிபதியை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணம் குறித்து பதிலளிக்க வேண்டும். முறையாக எப்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டது? விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடுவது யார் என்பது குறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் " எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in