
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது. மேலும் பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் கூறியிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பின்னர் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொருத்தமட்டில் கட்சியின் விதிகள் எந்த ஒரு இடத்திலும் மீறப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப் போய் உள்ளது. நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை ஏற்படுத்தவே இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பு ஒப்புதலுக்கு பிறகு தான் கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார். அதிமுகவின் உட்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பு தான் அதிமுக பொதுக்குழு ஆகும். எனவே அதற்கு தான் அனைத்து அதிகாரங்கள் உண்டு. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இதன் பிறகு ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வாதங்களை முன்வைத்தார். அ.தி.மு.க.வில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே இ.பி.எஸ் தரப்பு தான். அவ்வாறு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் முறையாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென கட்சியில் குழப்பங்களை விளைவிக்கும் வகையில் அந்த இரண்டு பதவிகளையும் நீக்க வேண்டும் என்று சொல்வதும் இபிஎஸ் தரப்புதான் எனக் குற்றம்சாட்டினார். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து இருக்கிறது. மேலும் பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் கூறியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
இதனிடையே, ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.