ஈ.பி.எஸ் மனைவிக்கு கரோனா... திட்டமிட்டப்படி பொதுக்குழு நடக்குமா?: குழப்பத்தில் அதிமுக

மனைவியுடன் ஈபிஎஸ்
மனைவியுடன் ஈபிஎஸ்

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர்கள் இருவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடக்குமா என்ற குழப்பம் அதிமுக முன்னணி தலைவர்களிடம் எழுந்துள்ளது.

சில மாதங்களாக கரோனா தொற்று பெருமளவில் குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்றின் வேகம் விறுவிறுவென அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் முககவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் இருவருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஈபிஎஸ் மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான தொற்று என்பதால் அவர் சேலத்தில் உள்ள வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொற்று என்பதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு ஒற்றைத் தலைமையை தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் சென்றுள்ள நிலையில் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வி அதிமுக நிர்வாகிகளிடம் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர்கள் மற்றும் மனைவி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் எடப்பாடிக்கும் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் அவரால் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட முடியுமா? திட்டமிட்டபடி பொதுக்குழுவில் கலந்து கொள்ளத்தான் இயலுமா என்பது தற்போது கேள்வியாக எழுந்துள்ளது.

இப்படி எதிர்பாராத தடங்கல்கள் எழுந்துள்ள நிலையில் எடப்பாடி மிகவும் எதிர்பார்க்கும் ஒற்றைத் தலைமை பொறுப்பை வழங்கும் பொதுக்குழு, திட்டமிட்டபடி ஜூலை 11-ம் தேதி நடப்பதும், அதில் அவருக்கு பொதுச் செயலாளர் பொறுப்பு கிடைப்பதும் கடினம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in