அதிமுக பொதுக்குழு தீர்ப்பு இன்று: 51 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார் ஈபிஎஸ்!

ஈபிஎஸ்
ஈபிஎஸ் அதிமுக பொதுக்குழு தீர்ப்பு இன்று: 51 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார் ஈபிஎஸ்!

மதுரையில் 51 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் நடைபெறும் திருமணத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்ப்பு வர உள்ள நிலையில் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயிலில் அதிமுகவின் 51-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும் மாநில அம்மா பேரவை சார்பில் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் மகள் உட்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாயத் திருமண விழா இன்று நடைபெற உள்ளது.

இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருமணம் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்திலிருந்து சாலை மார்க்கமாக மதுரை வருகை தர உள்ளார். காலை 8.30 மணி அளவில் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் தொண்டர்கள் புடைசூழ திருமணம் நடைபெறும் டி.குன்னத்தூர் அம்மா கோயில் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. சரியாக 9.30 மணி அளவில் சமத்துவ சமுதாய திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமண நிகழ்வை நடத்தி வைக்க உள்ளார்.

முன்னதாக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். பிறகு மணமக்களை வாழ்த்திவிட்டு மீண்டும் சாலை மார்க்கமாக கப்பலூர் அருகே தனியார் விடுதிக்கு சென்று மதியம் 1.20 மணிக்கு ஏர் இந்தியா விமான மூலம் மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டு செல்ல உள்ளார். இதற்கிடையில், அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வர இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in