புதிய நீதிபதி கையில் அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

புதிய நீதிபதி கையில் அதிமுக பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரியும், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும் இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தடை விதிக்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் ஓபிஎஸ். வழக்கு விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் 2 வாரத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, வழக்கின் புதிய திருப்பமாக, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்றும் வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பினர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டனர். இந்த முறையீட்டை அவர் நிராகரித்தார். இதன் பின்னர் மீண்டும் ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே, வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வந்தபோது, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன், என்னிடம் முறையிட்டால் நாளே விலகி இருப்பேனே என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், வழக்கு கடந்த 5-ம் தேதி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை பரிசீலித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு பிறகு அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும். மனு தள்ளுபடி செய்யப்பட்டால் ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in