அதிமுக பொதுக்குழு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு குறித்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன்மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப்  பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்து நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஓ.பி.எஸ் தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. அந்த வழக்கை விசாரித்த  நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தாா். தனி நீதிபதியின் இந்த  தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிச்சாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 

அதனை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். அவருடைய ஆதரவாளரும், பொதுக்குழு உறுப்பினருமான அம்மன்.பி.வைரமுத்து என்பவர்  சார்பிலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர். அதனையடுத்து  எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தொண்டர்கள்  விருப்பம், கட்சியின் நலனை கருத்தில் கொண்டு ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.

பொதுக்குழு கூட்டுவதற்கு முன்னதாக ஓபிஎஸ்க்கு  நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை ஓ.பன்னீர் செல்வம் மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த நிவாரணமும் பெற தகுதியற்றவர் ஓ.பன்னீர் செல்வம்' என அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, முன்பே அறிவித்துள்ளபடி இந்த வழக்கு நாளை நவம்பர் 21 ம் தேதி மீண்டும்  விசாரணைக்கு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in