திமுக பொறுப்பாளரை பொன்னாடை போர்த்தி வரவேற்ற அதிமுக மாவட்ட செயலாளர்!

திமுக பொறுப்பாளரை பொன்னாடை போர்த்தி வரவேற்ற அதிமுக மாவட்ட செயலாளர்!

நாகர்கோவிலில் திமுக மாவட்டப் பொறுப்பாளரை அதிமுக மாவட்ட செயலாளர் பொன்னாடை போர்த்தி வரவேற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுரேஷ்ராஜனின் பதவி உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப்பின் பறிக்கப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் வசம், திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இதேபோல் அதிமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ்.ஏ.அசோகன். இவர் திமுக பொறுப்பாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷை இன்று ஆய்வுப்பணிக்கு வந்தபோது பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மகேஷ், எஸ்.ஏ.அசோகன் ஆகியோரது எதிர்முகாம் இந்த புகைப்படத்தை முகநூல் பக்கங்களில் பதிவிட்டு, ‘என்ன நடக்கிறது ?’ என்கிற ரீதியில் பதிவுகளையும் தட்டிவிட்டனர்.

அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், குமரிமாவட்ட ஆவின் பால்வளத் தலைவராகவும் உள்ளார். குமரிமாவட்ட ஆவின் அலுவலகம் நாகர்கோவிலில் உள்ளது. அந்த வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றுவது குறித்து மேயர் மகேஷ் ஆய்வு செய்ய வந்தார். அந்த வளாகத்திற்கு சொந்தமான ஆவினுக்கு, சேர்மன் என்ற முறையில் மகேஷுக்கு பொன்னாடை அணிவித்தார் எஸ்.ஏ.அசோகன். ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான அசோகனின் குடும்பம் தலைமுறை, தலைமுறையாக எம்.ஜி.ஆர் விசுவாசிகள். ’வருவோரை வரவேற்கும் பண்பு தான் இது!’ சுருக்கமாக முடிக்கின்றனர் அதிமுகவினர்!

திமுக கரைவேட்டி கட்டிய நபர்களைப் பார்த்தாலே காததூரம் ஓடுகின்ற காலம் அதிமுகவில் ஜெயலலிதாவுடனும், அதிமுக ஆள்களைக் கண்டாலே நகர்ந்துவிடுகிற காலம் திமுகவில் கருணாநிதியுடனும் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் இது விவாதத்திற்குரிய விசயம் என்னும் பார்வையில் இருந்தும் அகண்டு விட்டது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in