அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 9-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார்.
இதனிடையே, அதிமுக தோல்வியால் கொந்தளித்த ஓபிஎஸ், "தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும்" என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 9-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது.
இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலில் தோல்விக்கான காரணம், ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம், அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் உள்ளிட்டவைகள் குறித்து இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.