`வேகமாக பரவிவரும் விஷக்காய்ச்சல்; கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்'- புதுச்சேரி அதிமுக ஆவேசம்

அன்பழகன்
அன்பழகன்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த இரண்டு மாத காலமாக வேகமாக பரவி வரும் விஷக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``புதுச்சேரி மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக பெருகிவரும் விஷக்காய்ச்சல் தொற்று நோயினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயால் சளி, இருமல், தொண்டை வலி, உடல் முழுவதும் தாங்க முடியாத வலி ஆகியவை ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இந்த விஷக் காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவும் கரோனா அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொற்றுநோய் போன்று பரவும் இந்த விஷக் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாகும்.

உள்ளாட்சித்துறை மூலம் தினசரி வார வேண்டிய குப்பைகள் கூட வாரப்படாமல் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை வாருவதால் நகர் பகுதி முழுவதும் வாரப்படாத குப்பைகள் துர்நாற்றம் வீசுகிறது. கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் ஆங்காங்கே வாய்க்கால் அடைப்பும், உடைப்பும் ஏற்பட்டு வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தேங்கி நிற்கும் மழை நீரினால் தொற்று நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

மக்களின் உயிர் சம்பந்தமான சுகாதார விஷயத்தில் சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அலட்சியமாக இருப்பது சரியான முடிவு அல்ல. உடல் நலத்துடன் பள்ளிக்குச் செல்லும் சிறுபிள்ளைகள் வீட்டுக்கு திரும்பும் பொழுது உடல் நலக்குறைவோடு திரும்பி வருகின்றனர். வகுப்பில் மற்ற சிறுவர்களுக்கு இந்த விஷக்காய்ச்சல் இருந்தால் அந்த வகுப்பில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பரவி விடுகிறது. மருத்துவமனைகளில் குழந்தைகளோடு பெற்றோர்கள் காத்திருப்பது அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது.

முதலமைச்சர் இது சம்பந்தமாக சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறையின் உயரதிகாரிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, விஷக் காய்ச்சலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்கேஜிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பத்து தினங்களுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.

விஷக்காய்ச்சல் பரவுவது என்பது இயற்கையான ஒன்றல்ல. நாம் வாழும் பகுதியில் சுகாதார சீர்கேடும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததும், தடுப்பு நடவடிக்கை இல்லாததுமே இது போன்ற விஷக் காய்ச்சல் பரவுவது காரணம் என்பதை உணர்ந்து அரசு விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in