ஓபிஎஸ், ஈபிஎஸ் சொந்த ஊர்களிலேயே அதிமுக படுதோல்வி

ஓபிஎஸ், ஈபிஎஸ் சொந்த ஊர்களிலேயே அதிமுக படுதோல்வி

ஓ.பன்னீர்செல்வம் பெரிய பேச்சாளர் இல்லை என்றாலும், அவரது ஒரு பேச்சு, ‘அட, மனிதர் அழகாப் பேசுறாரே’ என்று உள்ளூர் செய்தியாளர்களால் மெச்சப்பட்டது. அது 2001-06 ஆட்சிக்காலம். தமிழகத்தையே அதிமுக ஆட்சி செய்துகொண்டிருக்க, ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்தை திமுக கைப்பற்றிய தருணம். இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது ஓபிஎஸ் சொன்னார், “ஊர்க்காவலுக்குப் போயிருந்தவன் சொந்த வீட்லேயே கொள்ளை போன மாதிரி ஆகிப்போச்சு...” என்றார். அதாவது, அதிமுக வெற்றிக்காக தமிழ்நாட்டையே சுற்றிவந்தபோது, தன்னுடைய சொந்த ஊரில் வெற்றி பறிபோய்விட்டது என்றார்.

இந்த முறை அவர் அப்படிச் சொல்ல முடியாது. காரணம், பெரியகுளம் நகராட்சியில் தன்னுடைய சொந்தத் தம்பி சண்முகசுந்தரத்தையே களமிறக்கினார் பன்னீர்செல்வம். பல நூறு கோடி செலவழித்து, தன் மகனை தேனி எம்பியாக்கிய அதே ஃபார்முலாவை, ஒரு சின்ன நகரத்தில் அப்படியே செயல்படுத்தினார். ஆனாலும் பரிதாபமாகத் தோற்றிருக்கிறது அதிமுக.

பெரியகுளம் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் 21 வார்டுகளில் மட்டுமே திமுக போட்டியிட்டது. மீதி வார்டுகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டதால், அந்த வார்டுகளை குறிவைத்துப் பணியாற்றினாலே வெற்றிபெற்றுவிடலாம் என்று கருதி செயல்பட்டார்கள் ஓபிஎஸ் குடும்பத்தினர். தமிழகம் முழுக்க மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வென்றாலும், தேனியில் மட்டும் எப்படி அதிமுக சொல்லியடித்ததோ அதேபோன்ற வெற்றியை, இந்தத் தேர்தலில் பெரியகுளத்தில் பதிவுசெய்யலாம் என்பது அவர்களது எண்ணம். ஆனால், மாலை 3 மணி நிலவரப்படி, பெரியகுளம் நகராட்சியில் 30-க்கு 20-க்கும் அதிகமான வார்டுகளை திமுக கூட்டணி வென்றுவிட்டது. இத்தனைக்கும் இந்த நகராட்சித் தலைவர் நாற்காலி ஓபிஎஸ்சும், அவரது தம்பி ஓ.ராஜாவும் ஏற்கெனவே அமர்ந்து தேய்தேய் என்று தேய்த்த பதவி. ஓபிஎஸ்சின் இளைய தம்பி சண்முகசுந்தரம் கவுட்சிலராகி இருக்கிறார் என்பது மட்டுமே ஆறுதல்

அதுமட்டுமின்றி, ஓபிஎஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிற போடி தொகுதியில் உள்ள போடிநாயக்கனூர் நகராட்சியையும் திமுகவே கைப்பற்றியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

இதே கதைதான், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கதையும். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும்கூட, அவர் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை இன்னமும் விடாமல் பிடித்துவைத்திருக்கிறார். ‘ஊர் எப்படிப் போனால் என்ன முதலில் வீட்டைப் பார்ப்போம்’ என்று சேலம் மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் வெற்றியைப் பதிவுசெய்ய கடுமையாக உழைத்தார். ஆனால், சேலம் மாநகராட்சியை திமுக வென்றுவிட்டது. கூடவே, எடப்பாடி நகராட்சியையும் திமுக கைப்பற்றியிருக்கிறது. பழனிசாமியின் வீடு இருக்கிற வார்டிலும் திமுகவே வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோவையிலும், திருப்பூர், கரூர் மாநகராட்சிகளிலும் அதிமுக மண்ணைக் கவ்வியிருக்கிறது.

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் சொந்த ஊரான காவேரிபட்டனம் பேரூராட்சியையும், திமுக கைப்பற்றியிருக்கிறது. அதிமுகவின் 2-ம் கட்ட தலைவர்களாக கருதப்பட்ட எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிமுகவுக்குத் தோல்வியே கிடைத்திருக்கிறது.

அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக, இந்தத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பதிவுசெய்யவில்லை என்றாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதிமுகவை கரைத்து, அதை பாஜக ஆதரவு வாக்குகளாக மாற்றும் முயற்சியில் பாஜக வென்றிருப்பதையே, இது காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in