ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: போராட்டம் அறிவிக்க நாளை முடிவு?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: போராட்டம் அறிவிக்க நாளை முடிவு?

திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில்  போராட்டங்களை நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (மே17) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார்

கட்சியை வலுப்படுத்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறித்தும், ஓபிஎஸ் , டிடிவி தினகரன் சந்திப்பு குறித்தும் நாளை விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டச் செயலாளர்கள் இருந்தனர். ஆனால், கட்சியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கியதால் அவருக்கு ஆதரவாக 6 மாவட்டச் செயலாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால் தற்போது அதிமுகவில் 69 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர்.

எனவே, மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கு செயலாளர்களை நியமிப்பது குறித்தும், ஆக. 20-ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதால்,   திமுக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. 

அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்புடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி  தலைமையில்  சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த  அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  

நாளை  நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவடைந்தவுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி  இந்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in