திமுகவுக்கு ஓட்டு போடச் சொல்லி தங்கமணி மிரட்டினாரா?

அதிமுக கவுன்சிலர் அளித்த புகரால் பரபரப்பு
திமுகவுக்கு ஓட்டு போடச் சொல்லி தங்கமணி மிரட்டினாரா?

மழைவிட்டும் தூவானம் விடாதது போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தபோதும் அதில் நிலவிய பிரச்சினை முடிவடையாமல் நீரு பூத்த நெருப்பாய் உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள வார்டுளில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 14 வார்டுகளை திமுகவும், 10 வார்டுகளை அதிமுகவும், 9 வார்டுகளை சுயேச்சையும் கைப்பற்றியது.

அதிக உறுப்பினர்களை வைத்துள்ள திமுக நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட் நிலையில் 31-வது வார்டு சயேச்சை உறுப்பினர் த. விஜய்கண்ணன் திமுக, அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றி இரு பெரும் கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் என 7 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

இச்சூழலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 16-வது வார்டு உறுப்பினரான வெங்கடேசன் என்பவரின் மனைவி பூங்கொடி (42) குமாரபாளையம் காவல் நிலையத்தில் அதிமுக நகர இளைஞரணி செயலாளரான முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் கே.எஸ்.எம். பாலசுப்ரமணியம், அதிமுக நகர அவைத் தலைவர் எஸ்.என்.பழனிசாமி, அதிமுக நகர்மன்ற 22-வது வார்டு உறுப்பினர் எஸ்.எஸ்.எம். ஈ.புருசோத்தமன், குமாராபளையம் அம்மா பேரவை இணைச் செயலாளர் ரவி, அதிமுக நகர பொருளாளர் கே.ஆர்.பாஸ்கரன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் தேர்தலில் நகர்மன்ற 8-வது வார்டு திமுக உறுப்பினர் சத்தியசீலனுக்கு ஆதரவாக ஓட்டுப் போடும்படி முன்னாள் அமைச்சர் பி.தங்மணி உள்பட மேற்குறிப்பிட்ட அதிமுகவினர் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தினர். இச்சூழலில் மார்ச் 4-ம் தேதி நடைபெற்ற நகர்மன்ற தலைவர் தேர்தலில் 31-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் த.விஜய்கண்ணன் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு நான்தான் காரணம் எனக் கூறி முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் என்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தனர். எனினும், நான் அதிமுக அனுதாபியாகவே இருந்து வருகிறேன். இச்சூழலில் மார்ச் 30-ம் தேதி நானும் எனது குடும்பத்தினரும் வீட்டில் இருந்தபோது அத்துமீறி வீட்டில் நுழைந்த மேற்குறிப்பிட்ட கே.எஸ்.எம்.பாலசுப்ரமணியம், எஸ்.என்.பழனிசாமி, எஸ்.எஸ்.எம்.ஈ.புருசோத்தமன், ரவி, கே.ஆர்.பாஸ்கரன் உள்ளிட்ட 20 பேர் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியும் விஜய்கண்ணனுக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர். எங்களால்தான் குமாரபாளையத்தில் நீ செல்வாக்கு பெற்றாய். எங்களை பகைத்துக் கொண்டாய். அதனால் உன் செல்வாக்கை சீர் குலைத்து தொழிலை நாசம் செய்துவிடுவோம் என மிரட்டியதாகவும், இதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் மனு அளித்துள்ளார்.

இம்மனு காவல்துறையினர் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது: என் மீது புகார் எதுவும் அளிக்கவில்லை. புகாரில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எனக்கு இந்த விவகாரம் எதுவும் தெரியாது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பணம் கேட்டதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் ஆய்வாளரிடம் தெளிவாக விளக்கம் அளித்துள்ளேன் என்றார்.

இதுகுறித்து அதிமுக நகர இளைஞரணி செயலாளரான முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் கே.எஸ்.எம். பாலசுப்ரமணியம் கூறுகையில், கடந்த இரு தினங்களாக நான் ஊரில் இல்லை. சென்னையில் உள்ளேன். அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக பொய்யான புகார் அளித்துள்ளனர் என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in