`இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டப்படி செல்லாது'

கூட்டம் நடத்திய கோட்டாட்சியருக்கு அதிமுக கண்டனம்
`இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டப்படி செல்லாது'
கம்மாபுரம் ஒன்றியக் குழுக் கூட்டம்

கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியக் குழுக் கூட்டத்தை நடத்தி, தலைவர் துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காரணமாக இருந்த விருத்தாசலம் கோட்டாட்சியருக்கு  அதிமுக சார்பில் அதன் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கம்மாபுரம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த மேனகா விஜயகுமாரும், துணைத் தலைவராக மருதை முனுசாமியும் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கம்மாபுரம் ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்கள்.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு உள்ளாட்சி பொறுப்பில் இருப்பவர்களை திமுக பக்கம் இழுத்து உள்ளாட்சி பதவிகளை திமுக கைப்பற்றி வருகிறது. அதன்படி அதிமுக வசமுள்ள கம்மாபுரம் ஒன்றியக்குழுவையும் திமுக கைப்பற்றத் திட்டமிட்டது. அதற்காக அதிமுக உறுப்பினர்கள் நான்கு பேரை திமுகவுக்கு ஆதரவாக இழுத்தனர். மேலும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த பாமக உறுப்பினர்களையும் திமுக தங்கள் வசம் ஈர்த்துவிட்டது.

இதன் காரணமாக அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாமல் போயிருக்கிறது. இதனையடுத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. 12 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் நோட்டீஸ் கொடுத்ததன் அடிப்படையில் இன்று கம்மாபுரம் ஒன்றியக்குழு அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் மொத்தமுள்ள 20 உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதிமுக உறுப்பினர்கள் உள்பட 7 பேர் கலந்து கொள்ளவில்லை. தலைவர், துணைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமல் கூட்டத்தை கலைத்து விட்டு கோட்டாட்சியர் சென்றுவிட்டார்.

அருண்மொழித்தேவன்
அருண்மொழித்தேவன்

இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மேற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான அருண்மொழித்தேவன் கூறுகையில், "தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 212(13) ன் படி அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்ற இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கம்மாபுரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் வருகை புரிய வேண்டும். ஆனால் 13 உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்திற்கு வந்த நிலையில், கூட்டத்திற்கான கோரம் 16 உறுப்பினர்கள் இல்லாத நிலையில் அந்த கூட்டத்தை நடத்தியிருக்கக்கூடாது. கூட்டம் குறித்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு சென்றிருக்க வேண்டும். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து தான் திரும்பவும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டம் நடத்த முடியும். ஆனால் சட்டத்திற்கு எதிராக விருத்தாசலம் கோட்டாச்சியர் கூட்டமும் நடத்தி வாக்கெடுப்பும் நடத்தியிருக்கிறார். இது சட்டப்படி செல்லாது. இதை நாங்கள் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்" என்கிறார்.

Related Stories

No stories found.