“நீட் விவகாரத்தில் திருடனைப்போல் சிக்கிக்கொண்டது அதிமுக” -முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

“நீட் விவகாரத்தில் திருடனைப்போல் சிக்கிக்கொண்டது அதிமுக. படிப்பதற்கே ஒரு தகுதி வேண்டும் என்று தடுக்கிற சூழ்ச்சியுடன் வருபவர்களைத்தான் எதிர்க்கிறோம். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் அவசியம் திமுகவுக்கு இல்லை” என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். கோவை மாநகரம், மாநகராட்சி, பல்வேறு நகராட்சிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்குசேகரித்து முதல்வர் பேசும்போது, “விவசாயிகளுக்காக கடைசிவரை உழைத்த நாராயணசாமி நாயுடு பிறந்தநாளில் இந்தப் பிரச்சாரக் கூட்டம் நடப்பது சிறப்புமிக்கது. பச்சைத் துண்டுக்கு இந்திய அளவில் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் நாராயணசாமி நாயுடு. நாராயணசாமி நாயுடு போராட்டத்துக்கு மதிப்பளித்து விவசாயிகள் மின் கட்டணமே செலுத்த தேவையில்லை என்று கலைஞர் அறிவித்தார். ஒவ்வொரு முறையும் விவசாயிகள் கடனை ரத்து செய்தது திமுக ஆட்சியே.

கோவையில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
கோவையில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் கடுமையாக எதிர்த்தது திமுக அரசு. விவசாயிகளுக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது திமுகதான். வேளாண்மை, உணவு ஆகிய 2 துறைகளையும், இரு கண்களைப்போல் கருதி திமுக அரசு செயல்படுகிறது. நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்படுகிறது. 1.5 லட்சம் விவசாயிகளுக்கு 1.89 லட்சம் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கியது திமுக அரசு.

அருந்ததி இன மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதும் திமுக அரசுதான். கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்துக்காக நிறைவேற்றிய திட்டங்களை அதிமுக அரசால் கூற முடியுமா?. பஞ்சு மீதான 1% வரியை திமுக அரசு ரத்து செய்தது. திமுக ஆட்சி அமைத்து ஓராண்டுக்குள் கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிலும் திமுக வெற்றி பெற்றால்தான் அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க முடியும். திமுக ஆட்சி என்பது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல, இனத்தின் ஆட்சி. அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையையும் திமுக அரசு நிறைவேற்றும்.

அதிமுக ஆட்சியில் நீட் மசோதா நிராகரிக்கப்பட்ட தகவல் முன்கூட்டியே தெரிந்தும், அப்போதைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் மவுனம் காத்தார். சட்டமன்றத்தில் நாம் கேள்வி எழுப்பிய போதும் உரிய பதில் அளிக்கவில்லை. நீட் விவகாரத்தில் திருடனைப்போல் சிக்கிக்கொண்டது அதிமுக. படிப்பதற்கே ஒரு தகுதி வேண்டும் என்று தடுக்கிற சூழ்ச்சியுடன் வருபவர்களைத்தான் எதிர்க்கிறோம். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யும் அவசியம் திமுகவுக்கு இல்லை” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in