அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவுதான் முடிவு செய்ய வேண்டும்: ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓபிஎஸ்- ஈபிஎஸ்
ஓபிஎஸ்- ஈபிஎஸ்அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவுதான் முடிவு செய்ய வேண்டும்: ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவுதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ்ஸுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்களது தரப்பு சார்பாக வேட்பாளரை தனியாக நிறுத்த விரும்புகிறோம். ஆனால் அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற எனது கையெழுத்தை வேட்பாளர் படிவத்தில் போடுவதற்கு மற்றும் கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. அதனால் இதுதொடர்பான தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தையும் எங்களது தரப்புக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், "எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அதிமுக பிரதிநிதி என்ற முறையில் பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. பொதுக்குழு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் பழனிசாமியின் இடையீட்டு மனுவை ஏற்கக்கூடாது. அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார். இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கோரி தங்களை யாரும் அணுகவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் செயல்பாடுகளை கண்காணிப்பதோ, முறைப்படுத்துவதோ இல்லை. தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் விவகாரங்களில் தலையிடுவதில்லை. வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தலை கண்காணிப்பது ஆகியவை தேர்தல் ஆணையத்தின் பணி" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு மற்றம் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை அதிமுக பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். பன்னீர்செல்வம், பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவை தலைவரால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த சி.வி.சண்முகம் கூறுகையில், "தமிழ் மகன் உசேன் தலைமையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் வேட்பாளராக இருப்பார். பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தை கடிதம் வாயிலாக பெற்று அவைத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இரு தரப்பும் கையெழுத்து போடுவது சாத்தியமில்லாதது. அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது" என்றார்.

ஓபிஎஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் கூறுகையில், "ஒருங்கிணைந்த அதிமுக பன்னீர்செல்வத்தின் நோக்கம். இடைக்கால மனுவுக்காக பொருந்தும் ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. ஓபிஎஸ்- இபிஎஸ் தவிர அதிமுகவில் வேறு தரப்பு என எதுவும் இல்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in