புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அண்பழகனுடன் வேட்பாளர் தமிழ்வேந்தன்
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அண்பழகனுடன் வேட்பாளர் தமிழ்வேந்தன்

வாக்காளர்களுக்கு போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர்: புதுச்சேரி தேர்தலை ரத்து செய்ய அதிமுக வேட்பாளர் கோரிக்கை!

புதுச்சேரி மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்வேந்தனுக்கு எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு
தமிழ்வேந்தனுக்கு எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 19 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் தமிழ் வேந்தன் போட்டியிடுகிறார். மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம் பாஜக வேட்பாளராகவும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கமும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும் போட்டியிடுகின்றனர்.

அங்கு 26 பேர் போட்டியிட்டாலும்  காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு வேட்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று காலை புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தலில் பணம் விளையாடுகிறது. பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்காளர்களுக்கு ரூபாய் 500 வீதம் பணம் கொடுத்து வருகிறார். 

தமிழ்வேந்தன்
தமிழ்வேந்தன்

அதேபோல காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சார்பில் வாக்காளர்களுக்கு ரூபாய் 200 பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இங்குள்ள தேர்தல் அதிகாரி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன்.

இரண்டு வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் புதுச்சேரி தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.  நேர்மையாக தேர்தலை நடத்த முற்படாவிட்டால் இந்த தேர்தலை புறக்கணிப்பேன்" என்று அவர் தெரிவித்தார். 

தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற அதிமுக வேட்பாளரின் புகாரால்  புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in