தொண்டர்கள்தானே மீண்டும் பொறுப்புக்கு வந்திருக்கிறோம்!

உட்கட்சி தேர்தல்கள் குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி தொகுதியில் 'ஹாட்ரிக்' வெற்றிபெற்றவர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ. மனதில் பட்டதை எப்போதும் பளிச்சென பேசிவிடும் சுபாவம் கொண்ட அவர் காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டி இது.

தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் பெரும் சர்ச்சையாகி உள்ளதே?

ஒவ்வொரு மதத்தினரும் அவர்களுக்கென பிரத்யேகமாக சில பாரம்பரியங்கள் வைத்துள்ளனர். அதில் தலையிடுவதற்கு எந்த அரசாங்கமாக இருந்தாலும் உரிமை இல்லை. பல்லக்குத் தூக்குவது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ளது. ஆதீனம் என்பது தனிப்பட்ட அமைப்பு. அவர்களின் பாரம்பரியம், பண்பாட்டில் பட்டினப் பிரவேசமும் ஓர் அங்கம். இதில் அவர்கள் யாரையும் தொந்தரவும் செய்வதும் இல்லை. முழுமனதோடு தான், பல்லக்குத் தூக்குகிறவர்களும் தூக்குகிறார்கள். யாரையும் நிர்பந்தித்து தூக்கச் சொல்வது இல்லை. அதுவும் வளாகத்தின் உள்ளே தான் இந்த விழா நடக்கும். அதற்குத் தடை என்னும் பேச்சுக்கே அவசியம் இல்லை என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.

இல்லாத ஒரு பழக்கத்தை புதிதாகக் கொண்டுவந்தால் அதுகுறித்து கருத்து முரண்கள் இருக்கலாம். பாரம்பரியமாக நடந்து வரும் இந்த நிகழ்விற்கு யாரேனும் எதிர்ப்பு காட்டியிருந்தால்கூட அரசு தலையிடலாம். அப்படியும் சூழல் இல்லை. அப்படியிருக்கையில் அரசின் தூண்டுதலில், அரசு அதிகாரிகள் தலையிடுவது எந்தவகையில் சரியாக வரும்?

ஜெயலலிதா காலத்தில் அதிமுக உட்கட்சித் தேர்தலில் சாதாரண தொண்டனுக்கும் ஜாக்பாட் அடிக்கும். ஆனால், இப்போது மீண்டும் பழையவர்களுக்குத் தானே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது?

இப்போது பொறுப்பில் இருப்பவர்கள் அனைவருமே தொண்டர்கள்தானே. திமுகவில் வாரிசுகள் தான் அடுத்தடுத்து கட்சிப் பதவிக்கு வரமுடியும். ஆனால், இங்கே அப்படி இல்லையே! எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி சாதாரண தொண்டனும் எந்த நிலைக்கும் வரலாம் என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இவ்வளவு ஏன், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் எங்களைப் போல் சாதாரண ஒன்றிய செயலாளராக இருந்து வளர்ந்து வந்தவர்கள் தானே. நானும் இப்போது மாவட்ட செயலாளராக உள்ளேன். 1977 -ல் இருந்தே கட்சியில் இருக்கிறேன். கிளைக் கழகத்தில் இருந்து வளர்ந்து வந்தவன் நான். அதைப்போன்ற தொண்டர்கள் தானே இப்போது பொறுப்புக்கு வந்திருக்கிறோம். அதனால் தான் உள்கட்சித் தேர்தலில் சிறு சலசலப்புக்கூட ஏற்படவில்லை. கிளைக்கழகம் தொடங்கி, மாவட்ட செயலாளர் தேர்வு வரை வெளிப்படையாகத் தான் தேர்தலை நடத்தினோம். விரும்பியவர் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தொண்டர்கள் ஏற்றுக்கொண்டதால் தான் உள்கட்சித் தேர்தல் அமைதியாக நடந்துமுடிந்திருக்கிறது.

மதுரை ஆதீனம் ஆளும் கட்சியினர் வாடகையைக் கேட்டால் மிரட்டுகிறார்கள் என்கிறார். ஆதீனங்கள் மீண்டும் மீண்டும் சர்ச்சையின் நாயகர்கள் ஆவது ஏன்?

ஆதீனங்கள் பேசுவது அரசியல் அல்ல. அவர்கள் அரசியல் களத்திலும் இல்லை. இன்றைய காலச் சூழலை அப்படி நகர்த்திவிட்டனர். பல மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்டவும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டவும் ஆதீனங்கள் தான் தங்கள் மடத்திற்குட்பட்ட இடங்களை இலவசமாகக் கொடுத்தனர். ஆதீனமடங்களுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. தலைமுறை, தலைமுறையாக அவர்கள் அதை சிறந்தவகையில் நிர்வகித்து வருகின்றனர்.

எந்தக் கட்சியினர் ஆக்கிரமித்துள்ளார்கள் என்பது இரண்டாவது விஷயம். ஆனால், இப்படிப்பட்ட சொத்துக்களை யார் அபகரித்தாலும் ஆதீனம் சொல்லத்தான் செய்வார். வாடகையைக் கேட்டால் அச்சுறுத்தல் இருக்கிறது என்கிறார் ஆதீனம். அவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டியது மாநில அரசின் கடமை!

திமுக ஆட்சிக்கு வந்து ஒராண்டுகாலம் ஓடிவிட்டது. இதை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?

குறிப்பிட்டுச் சொல்லும்படி நிறைகள் ஒன்றுகூட இல்லை. நூற்றுக்கணக்கில் குறைகள் தான் உள்ளன. மின் தடை மக்களை வாட்டி வதைக்கிறது. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள் அதைக் கொடுக்கவில்லை. நீட் தேர்வை நாங்கள் ஆட்சிக்கு வந்ததுமே நிறுத்திவிடுவோம் என்றார்கள். ஆனால், இப்போதுதான் மசோதாவே ஒருவழியாக அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததுமே தமிழகத்தில் நீட் இருக்காது. அதற்கான சூட்சுமம் தெரியும் என மக்களை ஏமாற்றிவிட்டனர். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என சொன்னார்கள் செய்யவில்லை. நகைக்கடன் 5 பவுன் ரத்து என்ற இவர்களின் அறிவிப்பை பெரிதாகச் சொல்லி ஓட்டுவாங்கிவிட்டு அதற்கு 13 லட்சம் பேர் தான் தகுதியானவர்கள் எனக் கூறிவிட்டனர். 40 லட்சம் பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. நிவாரணமும் சரியாக கிடைப்பதில்லை. இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் திமுக தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு, ஓராண்டு சாதனை என பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறது. சாதனை என்றால் மக்கள்தான் சொல்லவேண்டும்! நீங்களே மக்களிடம் ஒரு சர்வே எடுத்துப் பாருங்கள். இந்த ஆட்சியின் மீது ஏகவருத்ததில் இருப்பது தெரியும்.

பாஜக தான் தமிழகத்தில் எதிர்க்கட்சி போல் தோற்றம் அளிக்கிறதே?

நீங்களே தோற்றம் என்றுதானே கேட்கிறீர்கள். தோற்றம் என்பதே மாயைதான். மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் ஊடகங்களில் அவர்கள் குரல் பிரதானமாக வருகிறதே தவிர, அடிப்படையில் மக்களின் உணர்வுகளில் தமிழகத்தில் இருப்பது திராவிட இயக்கங்கள்தான். அதிலும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் அதிமுக செய்யும் பணிகளை யாராலும் ஈடுசெய்யமுடியாது. அதிமுகவுக்கு நிகர் அதிமுகதான். மக்களுக்கும் இதுதெரியும்.

ஜெயலலிதா கால எதிர்க்கட்சி அதிமுகவில் அடிக்கடி போராட்டங்கள் நடக்கும். இப்போது அதுவும் குறைந்துவிட்டதே?

சொத்துவரியை உயர்த்திய இரண்டே நாளில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தோம். மே தினப் பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தினோம். நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு பெரும்கூட்டம் வந்தது. அம்மா இல்லை என்னும் வருத்தம் தொண்டர்கள் மனதில் இருக்கிறதே தவிர, கட்சியின் எழுச்சிக்கு குறைவே இல்லை.

அதிமுகவை பலப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்கிறார்களே..?

அவர் உண்மையாகவே ஜெயலலிதா ஆட்சி தொடரவேண்டும் என நினைத்திருந்தால் கடந்த தேர்தலில் அமைதியாக இருந்திருக்க வேண்டும். அதிமுகவின் வெற்றிக்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ உதவிசெய்துவிட்டு மீண்டும் கட்சிக்குள் வர விரும்பியிருந்தால் ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், திமுகவின் வெற்றிக்கு துணைபோகும் வகையில் அமமுக போட்டி போட்டு, அதனால் சில தொகுதிகளில் நாங்கள் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம். கோவில்பட்டிக்கே வந்து டிடிவி தினகரன் எனக்கு எதிராகப் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதிமுகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனியாக நின்று எங்கள் வெற்றிவாய்ப்பை பாதிக்க வைத்து திமுக ஆட்சி மலர மறைமுகத் துணை போனவர் என்றுதான் சசிகலா குறித்து தொண்டர்கள் மனதில் இருக்கிறது. பிறகு எப்படி அவரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in