சபாநாயகரின் செயலை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம் அறிவிப்பு: அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு

சபாநாயகரின் செயலை கண்டித்து அதிமுக உண்ணாவிரதம் அறிவிப்பு: அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சித் துணைத் தலைவராக பேரவையில் அங்கீகரிக்காததைக் கண்டித்து நாளை அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிகோரி அதிமுக சாரபில் இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்கக்கோரி அ.தி.மு.க சார்பில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடிதம் வழங்கி வெகுநாட்கள் ஆகியும் இதுவரை ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்காததை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து நாளை அ.தி.மு.க சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதிகோரி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் மற்றும் அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், அறவழி போராட்டம் நடத்தவுள்ளதால் முறையாக அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாகவும், பரிசீலித்து பதிலளிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அனுமதி கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், 62 பெரியதா? 4 பெரியதா? என்பதுகூட தெரியாமல் சபாநாயகர் உள்ளார். சட்டமன்றத்தில் நடைபெறும் ஜனநாயக படுகொலையை கண்டித்தும், சபாநாயகர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in