தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர் ராவ்: 2024 தேர்தலுக்கு புதிய வியூகம்!

தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர் ராவ்: 2024 தேர்தலுக்கு புதிய வியூகம்!

2024 மக்களவைத் தேர்தலுக்கான முக்கிய வியூகமாக, தேசிய கட்சியின் பெயரை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

விஜயதசமி கொண்டாட்டங்களுக்கு இடையே இன்று தெலுங்கானா பவனில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தேசிய கட்சி குறித்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பெயர், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்.டி.குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தெலுங்கானா எம்எல்ஏக்கள் மற்றும் சில விவசாய சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சியை இன்று மதியம் 1.19 மணிக்கு பரிந்துரைக்கப்பட்ட "சுப நேரத்தில்" தொடங்கியுள்ளார் கேசிஆர்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கி, தற்போது பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களில் நாட்டின் நம்பர்-1 மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது என சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தற்போது கட்சியின் கொள்கைகளில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், டிஆர்எஸ் என்ற பெயரை பிஆர்எஸ் என மாற்றியதை ஒப்புக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி, சந்திரசேகர் ராவை தேசியத் தலைவர் என்று பாராட்டினர். எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க முயற்சித்து வரும் நிலையில் சந்திரசேகர் ராவின் தேசிய கட்சி அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏற்கெனவே எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மம்தா பானர்ஜி ( மேற்கு வங்கம்), நிதிஷ் குமார் (பிஹார்), அர்விந்த் கேஜ்ரிவால் (டெல்லி), மு.க.ஸ்டாலின் (தமிழ்நாடு), பினராயி விஜயன் (கேரளா) மற்றும் நவீன் பட்நாயக் (ஒடிசா) உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார்.

தெலுங்கானாவில் முனுகோட் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 3-ம் தேதி நடத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நவம்பர் 6-ம் தேதி நடக்கவுள்ளது. இந்த நிலையில் தெலங்கானாவில் சந்திரசேகர்ராவ் - பாஜக இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in