`இளைஞர்களுக்கு நல்ல பலன் அளிக்கும் திட்டம் `அக்னிபத் '- போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் வரவேற்கும் ஆளுநர்

`இளைஞர்களுக்கு நல்ல பலன் அளிக்கும் திட்டம் `அக்னிபத் '- போராட்டம் வெடித்திருக்கும் நிலையில் வரவேற்கும் ஆளுநர்

அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் தூத்துக்குடியில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அக்னிபத் நல்ல திட்டம் எனச் சான்றிதழ் கொடுத்துள்ளார். பாஜகவினரின் குரலாகவே ஆளுநரின் பேச்சு ஒலித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தூத்துக்குடி வந்திருக்கிறார். அந்தவகையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி அங்குநடைபெற்ற வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்றுப் பேசினார். இந்தப் பேச்சுதான் சர்ச்சைக்கு தூபம் போட்டுள்ளது.

அந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி, “17 வயதான மாணவர்கள் அக்னிபத் திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது. அது இளைஞர்களுக்கு வருமானத்துடன் கூடிய நல்ல பலன் அளிக்கும் திட்டமாகும். ஆனால் சிலர் அக்னிபத் திட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துகின்றனர்” எனவும் பேசினார்.

அக்னிபத் திட்டத்தால் வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திலும் அக்னிபத் திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இப்படி பரபரப்பான சூழலில் அக்னிபத் திட்டத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றுப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in