செங்கல்பட்டிலும் வெடித்தது அக்னிபத் போராட்டம் : ரயிலை மறிக்கச் சென்ற வாலிபர்கள் கைது!

செங்கல்பட்டிலும் வெடித்தது அக்னிபத் போராட்டம் : ரயிலை மறிக்கச் சென்ற வாலிபர்கள் கைது!

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கல்பட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஒரு பெண் உட்பட 17 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டத்தின் காரணமாக ரயில் மறியல், கலவரம், ரயில்கள் தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து இந்தியா முழுவதும் ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. தமிழகத்திலும் இன்று எதிர்ப்பு கிளம்பியதால் ரயில்வே நிலையங்களில் பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்திற்கு முன்பாக இந்திய ராணுவ பயிற்சி மாணவர்கள் இன்று காலையில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். படிப்படியாகத் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுக்கத் தொடங்கி இருக்கிறது.

செங்கல்பட்டில் இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மத்திய அரசிற்கு எதிராக புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே நிலையத்திற்குப் பேரணியாகப் போராட்டக்காரர்கள் சென்றனர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in