
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி வெற்றி பெற்றதையடுத்து, கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி இழப்பது உறுதியானது.
2019 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் அதிமுக 10, திமுக 4, பாஜக 1 என வெற்றி பெற்றன. அதிமுகவின் ஆர்.லதா ரெங்கசாமி ஒன்றியக்குழு தலைவராகவும், சி.பாப்பாத்தி துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒன்றியக்குழு தலைவர் லதாவின் கணவர் ரெங்கசாமி மீது நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், பணிகள் ஒதுக்க கமிஷன் கேட்பதாகவும், அலுவலகத்தில் உள்ள 3 வாகனங்களுக்கு 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள அவர்களது பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையில் துணைத்தலைவர் சி.பாப்பாத்தி தலைமையில் 8 அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்தனர். திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் லதா வேலுசாமி திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர் லதா மீது கடந்த பிப்.3ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி நோட்டீஸ் அளித்தனர். அதனையடுத்து குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் தோகைமலை ஊராட்சி ஒன்றியக் குழு சிறப்புக்கூட்டம் ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லதா ரெங்கசாமி, அதிமுக உறுப்பினர் முருகேசன், திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த லதா வேலுசாமி ஆகிய 3 பேர் நீங்கலாக 11 திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பாஜக ஒன்றியக்குழு உறுப்பினர் சரண்யா ஆகிய 12 பேர் பங்கேற்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற 12 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. இதனால் ஒன்றியக்குழு தலைவர் லதா ரெங்கசாமி பதவியிழப்பது உறுதியானது.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.