பாஜகவில் அடைக்கலமாகும் அசோக் சவான்; காங்கிரஸ் முன்னாள் முதல்வரின் முடிவால் பரபரப்பு

அசோக் சவான்
அசோக் சவான்

மகாரஷ்டிர மாநில முன்னாள் முதல்வரான அசோக் சவான், காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகிய நிலையில், இன்று பாஜகவில் இணைகிறார்.

மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சிக்கு அடிமேல் அடியாக விழுந்து வருகிறது. மக்களவை தேர்தல் நெருக்கத்தில், முக்கிய தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி ஆகியவற்றில் அடைக்கலமாகி வருகின்றனர். அந்த வரிசையில் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகிய நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைகிறார்.

பாஜக - காங்கிரஸ்
பாஜக - காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான நானா படோலுடன், அசோக் சவானுக்கு எழுந்த உரசல் காரணமாக இந்த கட்சித் தாவல் நிகழ்ந்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணிக்குள் சீட் பங்கீடு தொடர்பாக முன்னதாக அசோக் சவான் மன வருத்தத்தில் இருந்தார். தனது ஆதரவாளர்களுக்கு சீட்டு ஒதுக்கீடு செய்வது தொடர்பான கருத்து வேறுபாட்டில் அவர் காங்கிரஸிலிருந்து விலகி உள்ளார்.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமையால் அசோக் சவான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பாஜக அரசின் மத்திய விசாரணை அமைப்புகளின் அழுத்தங்களுக்கு பயந்து கட்சி மாறும் தலைவர்களின் வரிசையில் அசோக் சவானும் சேர்ந்ததாக தாக்குதலுக்கு ஆளானார். மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், பாஜகவின் ’வாஷிங் மெஷின்’ சலவைக்கு அடுத்த உருப்படி ரெடி என்றும், துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் திறக்கும் என்றும் அசோக் சவானை விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியுடன் அசோக் சவான்(இடது)
ராகுல் காந்தியுடன் அசோக் சவான்(இடது)

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சங்கர்ராவ் சவானின் மகனான அசோக் சவான், நாந்தேட் பகுதியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருப்பவர். கல்லூரி நாட்களில் மாணவர் தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அசோக் சவான், தந்தை வழியில் காங்கிரஸ் கட்சியின் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் உட்பட முக்கியப் பதவிகளை வகித்தார். 2 முறை நாந்தேட்டில் இருந்து எம்.பி-யாக தேர்வாகி இருக்கிறார். மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

மாநில அமைச்சர் மற்றும் முதல்வர் பதவிகளை அலங்கரித்துள்ள அசோக் சவான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கு போட்டிருக்கிறார். இன்று மதியம் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அசோக் சவான் பாஜகவில் இணைகிறார். விரைவில் பாஜக சார்பிலான மாநிலங்களவை உறுப்பினராக அசோக் சவான் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாகவும் தெரிய வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in