கர்நாடக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கோபம்: காங்கிரஸ் எம்எல்ஏ ருத்ரப்பா லமானியின் ஆதரவாளர்கள் போராட்டம்

கர்நாடக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் கோபம்: காங்கிரஸ் எம்எல்ஏ ருத்ரப்பா லமானியின் ஆதரவாளர்கள் போராட்டம்

காங்கிரஸ் எம்எல்ஏ ருத்ரப்பா லமானிக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அவரின் ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று கர்நாடக அமைச்சரவையில் புதிதாக 24 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு இன்று பெங்களூரு ராஜ்பவனில் 24 பேரை இணைத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்தது. ஆனால், இந்த அமைச்சர்கள் பட்டியலில் காங்கிரஸ் எம்எல்ஏ ருத்ரப்பா லமானி இடம் பெறவில்லை.

பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி பெங்களூருவில் உள்ள கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அவரின் ஆதரவாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் லக்ஷ்மண் சவடி ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இது குறித்துப் பேசிய லமானியின் ஆதரவாளர் ஒருவர், “நேற்றிரவு வரை எங்கள் பஞ்சாரா சமூகத் தலைவர் ருத்ரப்பா லாமணியின் பெயர் பட்டியலில் இருந்தது. ஆனால் இன்று அவர் பெயர் இல்லை என்று பார்த்தோம். எங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. நாங்கள் எங்கள் 75% வாக்குகளை காங்கிரஸுக்கு வழங்கியதால்தான் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். எனவே எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவராவது அமைச்சராக இருக்க வேண்டும்" என்று கூறினார். நடந்துமுடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் ஹாவேரி தொகுதியில் இருந்து ருத்ரப்பா மணப்பா லமானி வெற்றி பெற்றார்.

3 நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் எம்எல்ஏ டி.சுதாகருக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் இல்லத்திற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பின்னர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கர்நாடக அரசில் 34 அமைச்சர்கள் இருக்க முடியும். அவர்களில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உட்பட 10 பேர் மே 20ம் தேதி பதவியேற்றனர். இன்று மேலும் 24 பேர் பதவியேற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in