கர்நாடகாவில் மிகப்பெரிய சுரங்க தொழிலதிபரும், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் தலைவரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான ஜனார்த்தன ரெட்டி, தன் மனைவி அருணா லட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் கட்சியை கலைத்துவிட்டு இன்று பாஜகவில் இணைந்தார்.
கர்நாடக அரசியல் களம் கடும் அனல் பறக்கிறது. இங்கே காங்கிரஸ் பாஜக இடையே நேரடி போட்டி நடக்கிறது. இம்மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தென் மாநிலங்களில் பாஜக நல்ல செல்வாக்குடன் உள்ள ஒரே மாநிலம் கர்நாடகாதான். எனவே இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றிபெற பாஜக உழைத்து வருகிறது.
இந்த சூழலில்தான் கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியின் தலைவர் தனது கட்சியை கலைத்துவிட்டு இன்று பாஜகவில் ஐக்கியமானார். பெங்களூருவில் பாஜக தலைவர்கள் பி.எஸ்.எடியூரப்பா, விஜயேந்திர எடியூரப்பா ஆகியோரின் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இது தொடர்பாக பேசிய ஜனார்த்தன ரெட்டி, “இன்று எனது கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டு, அக்கட்சியில் சேர்ந்துள்ளேன். மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் காண பாஜகவில் இணைந்துள்ளேன். நான் எனது 25 வது வயதிலிருந்து பாஜக தொண்டனாக இருந்திருக்கிறேன். அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டபோது நான் தீவிர பாஜக தொண்டனாக இருந்தேன். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் இப்போது கட்சியில் இணைந்தேன். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை” என்று அவர் கூறினார்.
கர்நாடகாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. கர்நாடகாவில் கடந்த 2008 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அப்போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஜனார்த்தன ரெட்டி. இதனிடையே அவர் மீது கனிம வள சுரங்க முறைகேடு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
சட்டவிரோதமாக இரும்பு தாதுக்களை வெட்டி எடுத்தது, கனிம சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. சிபிஐ இவர் மீது வழக்குப் பதிவு செய்து இவரை சிறையில் அடைத்தது. சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பாஜகவுடன் எந்தத் தொடர்பையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை.
பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற கட்சியைத் தொடங்கினார். மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தாளும் அரசியலுக்கு எதிரான பசவண்ணரின் சிந்தனையுடன், கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா கட்சியை உருவாக்கியுள்ளதாகக் கூறினார். அவரது கட்சி சார்பில் 2023 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர் மட்டும் வெற்றிபெற்றார். இந்நிலையில் இன்று அவர் மீண்டும் தன்னை பாஜகவில் இணைந்துள்ளார்.
ஜனார்த்தன ரெட்டி கட்சியில் இணைந்தது குறித்து பேசிய பிஎஸ் எடியூரப்பா, "ரெட்டி எடுத்தது நல்ல முடிவு. இது எங்கள் கட்சியை மேலும் பலப்படுத்தும். 28 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும். அவரது மனைவி மற்றும் நண்பர்கள் பாஜகவில் இணைந்தது எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. அவர்களை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!
50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!
அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!
அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!