
தனக்கு எதிரான பணமோசடி விசாரணையை ரத்து செய்யக் கோரிய ராபர்ட் வதேராவின் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததை மேற்கோள் காட்டி, "இந்திய அரசியலில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம்" என்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவரது தாயாருடன் தொடர்புடைய நிறுவனமான ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி, பிகானரில் நிலம் வாங்கியது தொடர்பாக அமலாக்கத்துறையின் விசாரணையை ரத்து செய்யக் கோரிய மனுவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, “ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியை திருமணம் செய்து கொண்ட ராபர்ட் வதேரா மீதான ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் மவுனம் கலைக்க வேண்டும். இந்திய அரசியலின் ஊழல் மிகவும் நிறைந்த குடும்பம் இது. அதன் ஒரே வேலை ஊழல் செய்வதும், ராபர்ட் வதேராவால் நிலத்தை அபகரிப்பதும் மட்டுமே ஆகும்.
இந்திய அரசியலில் இவர்கள்தான் ஊழல் மிகுந்த குடும்பம். இந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஊழல் வழக்குகளில் ஜாமீனில் உள்ளனர். ஊழலைப் பொறுத்துக் கொள்ளாத அரசுக்கு இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என்று அவர் கூறினார்.
ராபர்ட் வதேரா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று காங்கிரஸ் அடிக்கடி கூறி வருகிறது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் ஏற்கெனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.