6 மாதங்கள் நீடித்த இழுபறி... கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்தது பாஜக!

6 மாதங்கள் நீடித்த இழுபறி... கர்நாடகாவில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்தது பாஜக!

தேர்தல் முடிந்து ஆறு மாத இழுபறிக்குப் பின்னர் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த பாஜக மூத்த எம்.எல்.ஏ அசோக் தேர்வு செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து, சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் முடிந்தும், மாநில பாஜக தலைவர், சட்டசபை, சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படவில்லை. கட்சி மேலிடத்தின் இந்த செயல்பாடு பாஜக தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாநில பாஜக தலைவராக, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார். அடுத்த கட்டமாக, எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக, பெங்களூரு விட்டல் மல்லையா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து தேசிய பொது செயலர் துஷ்யந்த் குமார் ஆகியோர், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மூத்த எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆகியோரிடம் இதுகுறித்து கருத்து கேட்டார். மேலிடம் சொல்லி அனுப்பிய தகவலையும் அவர்களிடம் தெரிவித்தனர்.

பின்னர் இவர்கள் கூட்டம் நடத்தும் ஹோட்டலுக்கு வந்தனர். ஒவ்வொரு எம்.எல்.ஏவிடமும் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்டனர். பலர் போட்டியில் இருந்தாலும், இறுதியாக பத்மநாபநகர் எம்.எல்.ஏ., அசோக் பெயரை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்மொழிந்தார். கார்காளா எம்.எல்.ஏ., சுனில்குமார், வழிமொழிந்தார். அனைத்து தலைவர்களும் அவருக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்தினர்.

மாநில தலைவர் விஜயேந்திரா லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த அசோக் தேர்வு செய்யப்பட்டால், மக்களவைத் தேர்தலில் பழைய மைசூரு மண்டலத்தில் பா.ஜ.கவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்பது மேலிடத்தின் கணக்கு. அதே நேரம், தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, பாலசந்திர ஜார்கிஹோளி, சிவராம் ஹெப்பார், சோமசேகர் ஆகிய ஐந்து எம்.எல்.ஏக்கள் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in