யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தான் முடிவு செய்யும்: ஓ.எஸ்.மணியன் திட்டவட்டம்

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.யாருடன் கூட்டணி என்பதை அதிமுக தான் முடிவு செய்யும்: ஓ.எஸ்.மணியன் திட்டவட்டம்

தமிழகத்தில் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை ஏற்கும். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட்டு என்பதை அதிமுக தான் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழக பாஜகவைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் பலர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக, பாஜக மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த மாவட்ட இளைஞர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து தினேஷ் ரோடி ஆறுமாத காலம் பொறுப்பில் இருந்து விலக்கப்படுவதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் அறிவித்தார். ஆனால், அடுத்த நாள் காலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி தெரிவித்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க பாஜக தலைமையே ஆதரவு தருகிறதா என்று அதிமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இதனால் அதிமுக, பாஜக தலைவர்களிடையேயான மோதல் தற்போது வலுவடைந்து வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை - அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அறிவித்ததாகவும், அதற்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் குரல்கள் எழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக தான் தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். முடிவு செய்யும். யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட்டு என்பதை முடிவு செய்யும் கட்சி அதிமுகதான்" என்று கூறினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு பதில் அளிப்பது போல முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்த கருத்திற்கு அதிமுகவினர் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in