அதிமுக என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது: சொல்கிறார் செல்லூர் ராஜூ

அதிமுக என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது: சொல்கிறார்  செல்லூர் ராஜூ

அதிமுக. என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " மதுரை நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. கொடிமங்கலம் பகுதியில் ரூ.17 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டதால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது தேனூர் பகுதியில் ரூ.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைந்து பணியை செய்வதாக அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை திறம்பட நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் திறம்பட செயல்பட்டன. குறிப்பாக கூட்டுறவுத் துறையில் எவ்வித தவறும் இன்றி சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யப்பட்டன. நான் அமைச்சராக பொறுப்பு வகித்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை நேர்மையாக கூட்டுறவு சங்க தேர்தல்கள் நடத்தப்பட்டன.

ஆயிரம் பொய் சொல்லி திருமணத்தை நடத்த வேண்டும் என்பார்கள். ஆனால் லட்சக்கணக்கில் பொய் சொல்லி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால், இந்த ஆட்சி மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

இப்போது அதிமுக என்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டு விட்டது. இதை நம்பி ஏறினால் டெல்லி செல்வார்கள். இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார்கள். அதிமுகவில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும். அதிமுகவை நம்பி வருகிற யாரையும் நாங்கள் கைவிட மாட்டோம். கை தூக்கி விடுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in