இரட்டை இலை சின்னம் யாருக்கு?-உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தலில் வந்த புது சிக்கல்!

இரட்டை இலை சின்னம் யாருக்கு?-உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தலில் வந்த புது சிக்கல்!

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுகவினர் போட்டியிடும் போது, அவர்கள் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9-ம் தேதி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

இதன்படி இன்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. கட்சி அடிப்படையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்கும். கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த படிவங்களில் சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கையெழுத்து இட வேண்டும். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்து இட்டுவந்தனர். தற்போது அதிமுக பொதுக்குழு பிரச்சினைகள் தொடரும் நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். கட்சி அலுவலகங்களில் ஓபிஎஸ் படங்கள் நீக்கப்பட்டுள்ளது. அதுபோல ‘நமது அம்மா’ நாளிதழிலும் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் கட்சி சின்னத்தை ஒதுக்கீடு செய்யும் ஏ மற்றும் பி ஆகிய இரண்டு படிவங்களில் யார் கையெடுத்து இடுவார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இருவரும் தனித்தனி வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களை ஒரே சின்னத்தில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in