
அதிமுகவினர் சசிகலா ஆதரவாளர்களுடன் இணைந்து செயல்படுமாறு உத்தரவிட்டதாக ஓபிஎஸ் சொன்னதற்கு விளக்கமளித்துள்ளார் தேனி அதிமுக மாவட்ட செயலாளர்.
அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனன் மறைந்து ஓராண்டு ஆன நிலையில் நேற்று தமிழகமெங்கும் அதிமுகவினர் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக நேற்று தேனியில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் மதுசூதனனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவினர் சசிகலா ஆதரவாளர்களுடன் இணைந்து செயல்படுமாறு உத்தரவிட்டதாக ஒரு வதந்தி தேனி மாவட்ட அதிமுகவினரிடையே பரவியது.
இந்நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சசிகலா ஆதரவாளர்களோடு இணைந்து செயல்படுங்கள் என்று ஒரு செய்தி ஓடிக்கொண்டே இருக்கிறது. தினகரனையும், சசிகலாவையும் வரவேற்போம் என்று நாங்கள் பேசினோம். அது எங்களைப் போன்ற சாதாரண கட்சிக்காரர்களின் எண்ணங்கள். ஆனால், ஓபிஎஸ் ஒன்றரை கோடி கட்சித் தொண்டர்களின் தலைவர், ஒருங்கிணைப்பாளர். அப்படிப்பட்ட ஒருவருடைய கருத்தாக இதனை வெளியிடுவது தவறு. மேலும், அவர் அப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கவே இல்லை. தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்" என்று விளக்கம் அளித்துள்ளார்.